சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சனி மகா பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பது நம்பிக்கை. சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு. சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தில் கலந்து கொண்டு, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால், சகல பாவங்களும் விலகும். புண்ணியங்களும் அதன் பலாபலன்களும் பெருகும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் ,மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும். தினம்தோறும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும். ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஒரு கைப்பிடி காப்பரிசி , ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம்புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.