சத்யநாராயண பூஜை விரதம் அனுஷ்டிக்கும் முறை

சத்யநாராயண விரதம் நம் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும்விதமாக அமைந்த விரதமாகும். இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.

பெளர்ணமி அன்று சத்யநாராயண விரதம் கடை பிடிக்கப்படுகிறது. பொதுவாகவே விரதம் என்பது எதையாவது வேண்டிக்கொண்டு அது நடக்கவேண்டும் என்பதற்காக அனுசரிக்கப்படுவது. ஆனால், இந்த சத்யநாராயண விரதம் அப்படியல்ல, நம் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும்விதமாக அமைந்த விரதம்!

இந்த சத்யநாராயண பூஜையை எப்படி அனுஷ்டிப்பது?

பொதுவாகவே இந்த விரத பூஜையை எந்த மாதத்திலும் வரும் பவுர்ணமி அன்றைக்கு அனுசரிக்கலாம். அன்றைக்கு பகல், இரவு பொழுதுகளைத் தவிர்த்து, பூர்ண சந்திரனின் உதய நேரத்தைப் பார்த்து அப்போது மேற்கொள்ளலாம். இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.

பௌர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்கவேண்டும். மஹாவிஷ்ணுவின் ஓர் அம்சம்தான் சத்யநாராயணர் என்பதால் அன்று மாலைப் பொழுதுவரை விஷ்ணு ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டிருக்கலாம். திரும்பத் திரும்ப விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாம். பூஜையறையிலேயே இந்த பூஜையை அனுசரித்தால் ரொம்பவும் விசேஷம் அல்லது பூஜை செய்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை பெருக்கி, நீரால் துடைத்து சுத்தம் செய்து, மாவுக்கோலம் போட்டுக்கொள்ளுங்கள்.

இடவசதிக்கேற்ப சின்னதாக மண்டபம் போல அமைத்துக்கொள்ளலாம் அல்லது ஒரு மணை போட்டு அதிலே சத்யநாராயணர் விக்ரகத்தை வைத்தும் பூஜை செய்யலாம். அல்லது சத்யநாராயணர் படம் கிடைத்தாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். மண்டபத்துக்குச் சின்னதாக ஒரு மாவிலைத் தோரணம் கட்டிக்கொள்ளுங்கள். மணை அல்லது மண்டபத்துக்குள் விக்ரகம் அல்லது படத்தை வைப்பதற்கு முன்னால் அதை நன்கு துடைத்து சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். இரண்டு வாழைக் கன்று வாங்கி இருபக்கமும் சாய்த்து வையுங்கள்.

இந்த மண்டபம் மேற்கு பார்த்தபடி இருக்கலாம். நீங்கள் ஒரு மணைமேல், கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ உட்கார்ந்து பூஜையை ஆரம்பிக்கலாம். உங்களுக்கு இடது பக்கத்தில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு சேர்த்துப் போட்டுக்கொள்ளுங்கள். அதன்மேல் அரிசியைப் பரப்பி வைத்துக்கொள்ளுங்கள்.

ஆறுமுனை உள்ள ஷட்கோணம் (நட்சத்திரம் போல) கோலத்தை அதன்மேல் விரலால் வரைந்து கொள்ளுங்கள். சுத்தமான நீர் நிரப்பிய ஒரு சொம்பை கோலத்தில் வையுங்கள். சொம்பில் கழுத்தைச் சுற்றி ஒரு பூச்சரத்தைக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். சொம்பிற்கு சந்தனம் குங்குமம் இடுங்கள். கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தை செருகி வையுங்கள். அதன் நடுவே மஞ்சள் பூசிய தேங்காயை வையுங்கள். பிறகு விநாயகரை மனதாற வணங்கிவிட்டு பூஜையை ஆரம்பியுங்கள். விஷ்ணு ஸ்தோத்திரங்களைச் சொல்லுங்கள்.

சத்யநாராயணர் அஷ்டோத்திரம் சொல்லிக்கொண்டே உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். பூஜை முடிந்ததும் பாயசம், வடை என்று பிரசாதங்கள் நிவேதனம் செய்யுங்கள். அடுத்து, கற்பூரம் காட்டி இந்த பூஜையை நிறைவு செய்யலாம். பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வெளியே வந்து, வானில் பூரணமாக ஒளிரும் சந்திரனைப் பார்த்து தரிசனம் செய்துவிட்டு நிவேதனப் பொருட்களை உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம்.

சத்யநாராயண பூஜை விரதமிருப்பதாக வேண்டிக்கொண்டு எந்த கோரிக்கை நிறைவேறவேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த கோரிக்கை நிறைவேறியதும் மறந்துவிடாமல் கண்டிப்பாக சத்யநாராயண பூஜையை அனுசரித்துவிடவேண்டும். நியாயமானதும், பிறருக்கு தீங்கு விளைவிக்காததுமான நம்முடைய கோரிக்கை எதுவானாலும் சத்யநாராயணர் நடத்திவைப்பார் என்று சத்தியமாக நம்புங்கள், வாழ்க்கை மகிழ்ச்சிக் கடலாகும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com