சந்தோஷ வாழ்வுக்கு வழிகாட்டும் குரு

மனிதராய் பிறந்தவருக்கு வாழ்வில் சந்தோஷம் மிக அவசியம். சந்தோஷம் என்பது மனதை எப்போதும் குழப்பமில்லாமல் வைத்திருப்பது. விழிப்புடன் வைத்திருப்பது. களங்கமில்லாமல் வைத்திருப்பது. வீட்டை விட்டு வெளியுலகிற்கு வந்துவிட்டால் மனதை சலனப்படுத்தும் விஷயங்கள் ஏராளமாக குவிந்து கிடக்கிறது. இந்த விஷயங்களை சந்தித்தாலும், நுகர்ந்தாலும் மனம் அதில் ஒட்டியும், ஒட்டாதும், பாதிப்படையாதும் இருக்க வேண்டும். அப்படி, சலனத்தில் சிக்கி கொண்டாலும் நாம் நமது சந்தோஷத்தை மீ்ட்டெடுக்க வேண்டும். இது எப்படி சாத்தியம் ஆகும் என்றால் குருவின் துணையால் மட்டுமே அது கைகூடும்.

அப்படி ஒரு நிலையை நமக்கு அருளும் குருவை நாம் தேடி கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். ஆன்மிக சாதகனுக்கு குருவின் துணை மிக மிக அவசியமாகும். நம்மை உணரவைத்து, மனதை தெளியவைத்து நேர்மை பாதைக்கு வழிவகுத்து சந்தோஷ வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருவாக தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா விளங்குகிறார். இவரை செல்லமாக சந்தோஷ சுவாமிகள் என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். ஆம், இவரது பெயரை உச்சரித்த மாத்திரத்தில், இவர் முகத்தை பார்த்த மாத்திரத்தில் அனைத்து கவலைகளும் மறந்து மனதில் தென்றலாய் சந்தோஷம் பரவுகிறது. இவர் திருவாய் மலரும் நேரத்தில் தத்துவங்கள் மழையென பொழிகிறார். தன்னலம் கருதாது பிறர்நலம், உலக நலம் கருதும் ஆத்ம சித்தர்.

சுவாமி ஓங்காரநந்தா ஆசிரமம் புதுச்சேரி, புதுப்பட்டிணம், சென்னையில் கொரட்டூர் ஆகிய இடங்களில் உள்ளது. இந்த ஆசிரமங்களில் பல்வேறு ஆன்மிக சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது. 80 வயதை கடந்த ஞானப்பழமாக இருக்கும் தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஆன்மிக விசாரங்களை நூல்களாக தொகுத்து பக்தர்களுக்கு வழங்கியுள்ளார். இதுவரை 80க்கும் மேற்பட்ட நூல்களை இவர் அருளியுள்ளார். இவரது ஜெக கீதை பக்தர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் ஞானம் ஊட்டுவதாக அமைந்துள்ளது.

‘ கருப்பை நிறைந்து கொண்டிருக்கிறது
இன்பமும், துன்பமும் சதுராடுகிறது
கடுகாடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது
இதுதான் உலகின் இயற்கை நீதி!
அன்றும், இன்றும் என்றும் இதுவே..!
வயிறு புடைக்க உண்ணாதீர்
வாய் கிழியப் பேசாதீர்
உயிர் சக்தியை வீணாக்காதீர்’
அறிவாயிரு, அமைதியாயிரு, அருளாயிரு, நல்லவராயிரு, ஆனந்தமாயிரு’

இதுவே சந்தோஷமாக வாழ வழி என்று தனது பக்தர்களுக்கு எப்போதும் சொல்வார் தவத்திரு ஓங்காரநந்தா. ஓங்காரநந்தா ஆசிரமத்தில் சுவாமிக்கு முதன்மை சீடராக விளங்கியவர் துறவி லட்சுமிபாய். இவர் புதுச்சேரி அரசு பள்ளியில் இசை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர். வீணை வாசிப்பதில் கலைவாணி, வாய்ப்பாட்டில் பல்வேறு கச்சேரிகள் செய்தவர். சமீபத்தில் இவர் ஜீவன் முக்தி பெற்றார். தவத்திரு ஓங்காரநந்தாவே அருகில் இருந்து இவரது உடலை சிதம்பரம் அருகில் உள்ள பி.முட்லூரில் சமாதிக்குள் பிரவேசம் செய்ய வைத்தார்.

துறவி லட்சுமி பாய் அவர்கள் சரஸ்வதி தேவியை பிரதானமாக கொண்டு அம்பிகை வழிபாடு நடத்துபவர். இவர் புதுச்சேரியில் உள்ள ஓங்காரநந்தா ஆசிரமத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி பூஜையை வெகு விமர்சையாக கொண்டாடுவார். ஒவ்வொரு நாளும் அம்பிகைக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்து ஆராதிப்பார். பின்னர், அன்னதானம் நடைபெறும். துறவி லட்சுமிபாய் அவர்கள் முக்தி அடைந்துவிட்டாலும், அவர் நினைவாக, அவர் வகுத்து சென்ற பாதையில் இந்த ஆண்டும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

துறவி லட்சுமிபாய் தன்னை சந்திக்க வருபவர்களிடம் திருவாய் மலர்ந்து, வந்தோம், வந்து கொண்டு இருக்கிறோம், வரப்போகிறோம், ஆத்மப்பேரன்பில் பரம்பொருள் ஆசியோடு, ஜீவப்பெருங்கருணையோடு கைலாச சாதனை செய்து ஜீவன் முக்தி அடைய வேண்டும். சிவதரிசனமும், ஜீவன் முக்தியும் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாதது என்று உபதேசம் செய்வார். துறவி லட்சுமிபாய்க்கு ஞானம் வாய்க்க முக்கிய காரணம் குருவின் அருள். குருவின் திருவடிக்கு அவர் முதன்மை சீடராக இருந்து ஆற்றிய சேவைகள் அவரை முக்தி பாதைக்கு அழைத்து சென்றுள்ளது.

குருவே வியந்து போற்றும் முதன்மை சீடராக அவர் சிறப்பாக சேவையாற்றியுள்ளார். பக்தியின் பாதையில் நுழைந்து நல்ல குருவை நாம் தேர்வு செய்தால் ஜீவன் முக்தி நிச்சயம். அந்த முக்தி துறவி லட்சுமிபாய் அம்மையாரை போன்று அனைவருக்கும் அருள் செய்வார் தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா. அவரது மலரடியை தொழுது உலக நலன் போற்றுவோம். நமது நலனை குரு பார்த்துக்கொள்வார். குருவின் நாமம் உச்சரித்தல், குருவின் திருமேனி சிந்தித்தல், குருவுக்கு சேவை செய்தல். அவர் நினைவில் அவரோடு இரண்டறக்கலந்து விடுதல் ஆன்மிக சாதனை. இதை பழகிவிட்டால் சந்தோஷம் நாட்டிலும் வீட்டிலும் பொங்கி வழியும் என்பதில் சந்தேகமில்லை.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com