சனீஸ்வரனும்.. மகாவிஷ்ணுவும்..

மகாவிஷ்ணுவின் தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணனுக்கு மகாவிஷ்ணுவும், சனி பகவானும் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம்.

ஒரு சமயம் தன் அலுவல்களைக் கவனிக்கப் வேகமாக புறப்பட்ட சனிபகவானை, இடையில் வந்து தடுத்து நின்றார், விஷ்ணு பகவான். சனியின் பார்வை தெய்வத்திடம் பலிக்காது என்பதால் நேராக நின்ற பெருமாளிடம், “ஐயனே! என்னைத் தடுத்து நிறுத்தும் காரணம் என்ன?” என்று கேட்டார்.

“நீ யாரைப் பிடிப்பதற்காக இவ்வளவு அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார் மகா விஷ்ணு.

புன்னகையுடன் வினவிய பெருமாளைப் பார்த்த சனி “உமக்குத் தெரியாததைப் போன்று கேட்கலாமா? நீங்கள் இங்கு என்னைப் போக விடாமல் தடுக்கும் காரணமும் அதுவே அல்லவா? இருந்தாலும் கூறுகிறேன். உம்முடைய தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணன் எனும் ஆலயத்திருப்பணி செய்யும் மனிதரைப் பிடிக்கும் காலம் இது. அதற்காகவே செல்கிறேன்” என்று பதிலளித்தார்.

உடனே பெருமாள், “அதைப்பற்றி பேசவே உன்னைத் தடுத்து நிறுத்தினேன். அவன் மனிதரில் மாணிக்கம். என் மேல் உள்ள பக்தியால் பார்ப்பவரிடம் எல்லாம், என் பெருமைகளை எடுத்துக்கூறி பக்தி மார்க்கத்தை வளர்த்து வருகிறான். மேலும் நான் குடியிருக்கும் பழுதடைந்த ஆலயங்களை எல்லாம் பிறரிடம் கையேந்தி கொடைகள் பெற்று, புதுப்பித்து திருப்பணிகள் செய்து வருகிறான். நீ அவனைத் துன்பப்படுத்துவதை எப்படி என் மனம் பொறுக்கும்?” என்றார்.

ஆனால் சனி கடமையில் சுத்தமானவன் அல்லவா? “பெருமாளே! அந்த ஈசனே சொன்னாலும் என் கடமைதான் எனக்கு முக்கியம். ஆனாலும் உங்கள் மனம் கவர்ந்த பக்தனுக்காக நீங்கள் கவலைப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆகவே ஏழரை வருடங்களுக்குப் பதில் ஏழரை மாதங்கள் அவனைப் பிடித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

பெருமாளோ, “இல்லை.. இல்லை.. அவ்வளவு கஷ்டங்களை அவன் தாங்க மாட்டான். ஒரு ஏழரை நாழிகை மட்டும் அவனைப்பிடித்து உன் கடமையை ஆற்று” என கேட்க, சனிக்கு பெரும் மகிழ்ச்சி “நல்லது.. ஏழரை நாழிகையில் அவனைப்படுத்தும் பாட்டைக் காண தயாராக இருங்கள். வருகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார் சனி.

பெருமூச்சு விட்ட பெருமாளும், நடப்பதைக் காணும் ஆவலில் பூலோகம் வந்தார்.

அங்கு கடமையே என்று விஷ்ணு சுலோகங்கள் சொல்லி, காலை வழிபாட்டை முடித்த ராதாகிருஷ்ணன் புதியதாக கட்டத் தொடங்கி இருக்கும் ஆலயத்தின் கணக்குகளை பார்க்கத் தொடங்கினார். இதுதான் சமயமென்று அவரைப் பிடித்தார் சனீஸ்வரன்.

அப்போது அங்கு வந்த இருவர் நன்கொடை என்று சொல்லி ஒரு மூட்டையை அவரிடம் தந்து வணங்கி விட்டு அவசரமாக சென்றனர். அதை அப்புறம் பிரிக்கலாம் என்றெண்ணி, மீண்டும் கணக்குகளை பார்க்கத் தொடங்கியவரை மீண்டும் அழைத்தது ஒரு குரல்.

நிமிர்ந்து பார்த்தவரை என்னவென்று கேள்வி எழுப்பக்கூட அனுமதிக்காமல், அடித்து துவைத்து அரசவைக்கு இழுத்துச்சென்று, அரசன் முன் நிறுத்தினான் ஒரு காவலாளி.

அங்கு இருந்த பணக்கார சீமாட்டி, “இதோ.. இவர்தான் கடைசியாக கோவிலுக்கு நன்கொடை என்று என் இல்லத்திற்கு வந்தவர். இவர்தான் அந்த நகைகளை எடுத்திருக்க வேண்டும்” என்று குற்றம் சாட்டினாள்.

ராதாகிருஷ்ணன் பதறினார். “ஐயோ! என்ன இது. நான் எதற்கு உங்கள் நகைகளை எடுக்கிறேன். பகவான் புண்ணியத்தில் மூன்று வேளை உணவுடன், இருக்க ஆலயம், உடுக்க காவித் துணி உள்ளது. எனக்கு எதற்கு உங்கள் நகை. நான் குற்றமற்றவன்.”

ஆனால் ராதாகிருஷ்ணன் இருந்த இடத்தில் இருந்து, காவலாளி கொண்டு வந்திருந்த மூட்டை, அந்தப் பெண்மணியின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக இருந்தது. அதற்குள் அந்தப் பெண்மணியின் நகைகள் இருந்தன.

சனீஸ்வரனின் விளையாட்டு தொடங்கி விட்டது..

நகைகளைத் திருடிய குற்றத்திற்காக ராதாகிருஷ்ணனுக்கு சவுக்கடிகளும் சாணிக்கரைசலும் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. ஊர் மக்கள் அவரைத் தூற்றினர்.

மனம் ஒடிந்த அந்த விஷ்ணு பக்தர்கள் ஆலய திருக்குளம் முன்பாக நின்றார். “பெருமாளே! என் நினைவு தெரிந்த நாள் முதல் உன்னைத்தவிர வேறொன்றும் என் சிந்தையில் நிறுத்தியதில்லை. இந்தப் பழியையும் நீ எனக்குத் தந்த பரிசாகவே நினைக்கிறன். ஆனாலும் பழியோடு வாழ்வதை விட உன் காலடியில் சேர்கிறேன்” என்றபடி குளத்தில் மூழ்கி இறக்கப் போனார்.

அப்போது ஒரு அசரீரி அவரை தடுத்து நிறுத்தியது. ‘நான் சனீஸ்வரன்! உங்களின் இந்த துயரத்துக்கு நானே காரணம். பெருமாள் மீதான உங்களின் பக்தியால் பெருமாளின் வேண்டுகோளை ஏற்று வெறும் ஏழரை நாழிகை மட்டுமே, இத்துன்பங்களை நீங்கள் அனுபவிக்க நேர்ந்தது. இனி உங்கள் மேல் உள்ள பழிச்சொல் நீங்கும்.”

அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர், அரசரும், பணக்கார பெண்மணியும். சற்று முன்புதான் நகையைத் திருடிய உண்மையான திருடர்கள் பிடிப்பட்டதாகவும், அவர்கள் தான் நகையை வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என ரதாகிருஷ்ணனிடம் நன்கொடையாக அளித்ததை ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தனர். இருவரும் அந்த பக்தரிடம் மன்னிப்பும் கோரினர். ஊர் மக்களுக்கு விஷயம் தெரிந்து அனைவரும் விஷ்ணு பக்தரை மரியாதையோடு வரவேற்றனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com