சித்தர்கள் அருளிய வாழ்வியல் ரகசியங்கள்

நம் வாழ்க்கையில் உடலும், உள்ளமும் சீராக இருக்க, சித்தர்கள் பலரும் பல்வேறு வாழ்வியல் ரகசியங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அதனை இங்கே பார்க்கலாம்.

சித்தர்கள் அருளிய வாழ்வியல் ரகசியங்கள்
காலையில் படுக்கையில் விட்டு எழும் போது, ஆண்கள் வலது கால் பெருவிரல் பூமியில் படும்படி அழுந்தி எழ வேண்டும். அதே போல் பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும். காலையில் எழுந்தவுடன், இரு கைகளையும் உரசி கண்களில் ஒற்றிக்கொள்வது நல்லது. ஏனெனில் கண்கள் நம்முடைய மனதின் வாசல். நம் எண்ணங்கள் கண்களின் வழியாகவே வெளிப்படும். கண்கள் நெருப்பை தரும் சக்தி கொண்டவை.

நாம் உறங்கும் பொழுது, மனம் மற்றும் எண்ணம் அமைதியடையும். இதுதான் இயற்கை. அப்படி நாம் உறங்கும் வேளையில் நெருப்பு சக்தி, கண்கள் வழியாக வெளியே செல்லாது. ஆகையால் உறங்கி எழுந்ததும் கைகளை உரசும் பொழுது சூடு உண்டாகி, கண்களைத் தொடும் பொழுது, அவை கண் களின் நெருப்பை கிரகித்து நமக்குள்ளேயே வைக்கும். இந்த கண் நெருப்பு மனிதனுக்கு மிகவும் அவசியம். இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு அளிப்பதாக சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

உணவுகளைப் பார்த்துக் கொண்டே சாப்பிடும் பொழுது, கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும். அதனால்தான் சாப்பிடும் வேளையில் புத்தகம் படிப்பது, மற்ற காட்சிகளைப் பார்ப்பது, பேசிக்கொண்டு கவனத்தை சிதறவிடக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். உணவில் இருந்து கவனத்தைச் சிதற விடுவதால், வயிற்றில் செரிமானம் நடப்பதில் பிரச்சினை உண்டாகும்.

கண்களில் உள்ள நெருப்பின் சக்தி பற்றி, மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்வைப் பார்க்கலாம்.

குருசேத்திரப் போர் நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் துரியோதனன். போர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக துரியோதனனை அழைத்தாள், அவனது தாய் காந்தாரி.

‘நாளை நீ, போருக்குப் புறப்படுவதற்கு முன், காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னைப் பார்க்க வா’ என்று கூறினாள்.

ஆனால் துரியோதனன் தாயின் முன்பு நிர்வாணமாக எப்படிச் செல்வது என்று நினைத்துக் கொண்டு, இடையில் ஒரு துணியை மட்டும் கட்டிக்கொண்டுச் சென்றான். துரியோதனன் தன் முன்பாக வந்திருப்பதை அறிந்த காந்தாரி பல ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்த தன் கண் கட்டுகளை அவிழ்த்தாள். அதுவரை தேக்கி வைத்திருந்த கண் நெருப்புகள், துரியோதனனின் இடையில் இருந்த துணிப்பகுதியைத் தவிர அனைத்துப் பகுதியிலும் பட்டது. இதனால் அவனது உடல் முழுவதும் இரும்பு போல் ஆகிவிட்டது.

போருக்கு சென்ற துரியோதனனுடன், பீமன் கதாயுதம் கொண்டு சண்டையிட்டான். பீமன் அடித்த ஒவ்வொரு அடியும், துரியோதனன் மீது விழும் பொழுது, ஏதோ இரும்பு துண்டில் சம்மட்டியால் அடிப்பது போல ‘டங்’ என்ற ஒலி மட்டுமே கேட்டது. குழப்பம் அடைந்த பீமன், இதுபற்றி கிருஷ்ணரிடம் கேட்டான்.

அதற்கு கிருஷ்ணர், ‘பல வருடம் கண்களைக் கட்டி யிருந்த காந்தாரி, கண்களைத் திறந்து துரியோதனனைப் பார்த்திருக்கிறாள். அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு தான், கவசமாக அவனை காவல் காக்கிறது’ என்றார். கண்களில் இருந்து வெளிப்படும் நெருப்புக்கு அவ்வளவு சக்தியிருக்கிறது என்பதைச் சொல்லும் ஒரு உதாரணக் கதை இது.

இந்த முறையைத் தான் சித்தர்கள் கொஞ்சம் மாற்றாக சொல்லியிருக்கிறார்கள். ‘உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ண வேண்டும், உணவை பார்த்து உண்ண வேண்டும்.’ கோவில்களில் தரப்படும் பிரசாதங்களை சிலர், கண்களில் ஒற்றி விட்டு சாப்பிடுவதை நாம் பார்த்திருக்கலாம். அது பக்தி மட்டுமல்ல. கண்களின் நெருப்பை கிரகித்துக் கொள்ள முன்னோர்கள் சொன்ன வழிமுறையும் தான்.

காலைக்கடனை முடித்தவுடன் குளித்து விட வேண்டும். காலை எழுந்தவுடன் குளிப்பதனால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது. வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து, பசியைத் தூண்டுகிறது. பசிக்காமல் உண்பது, நேரம் தவறி உண்பது, அடிக்கடி இறைச்சி உணவுகளை உண்பது, துரித உணவுகளை உண்பது போன்றவை தான், நோய்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன. காலை எழுந்தவுடன் ஆறு, குளங்களில் நீராட வேண்டும் என்று சித்தர்கள் சொல்கிறார்கள். அப்போது மந்திரங்களைச் சொல்லியபடி தண்ணீரில் மூழ்க வேண்டுமாம். ஆறு அல்லது குளங்களில் தொப்புள் பகுதி மூழ்கும் வகையில் நின்று கொண்டு குளிக்க வேண்டும் என்று சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் தொப்புள் பகுதி மூழ்கும்படி நின்று மந்திரங்களை உச்சரித்தால், அது பலிக்கும் என்று சொல்லி வைத்துள்ளனர்.

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் ஆறு, குளங்களைத் தேடிச் செல்ல வழியில்லை. அதனால் உணவு முறைகளையாவது அவர்கள் சொல்லி வைத்தபடி பின்பற்றலாம்.

உணவு சாப்பிடுவதற்கு முன்பாக கை, கால்களை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் கால்களை மடக்கி தரையில் அமர வேண்டும். கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல் மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும். சர்க்கரை நோய் வருவது தவிர்க்கப்படும்.

பிறகு வலது கையில் நீர் ஊற்றி மூன்று முறை உறிஞ்சி குடிக்க வேண்டும். உள்ளங்கையில் நீர் ஊற்றி உறிஞ்சிக்குடிப்பதால், நம் உடலில் பல அற்புதங்கள் நிகழ்வதாக சித்தர் பெருமக்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.

அதற்கு கைகளைப் பற்றி நாம் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை, தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடன், முதன் முதலாக சாப்பிடும் பால் வயிற்றில் பட்டவுடன், வயிறு தன்னுடைய செயலைத் தொடங்குகிறது என்பதை நாம் அறிவோம். பிறந்த குழந்தை கைகளை மூடியபடியே இருக்கும். இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது. மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை என்றும் சொல்கிறது.

இதனால் தான் அகத்தியர் சொல்லும் போது, ‘எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் ஊற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு, கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடுங்கள்’ என்கிறார்.

வயிற்று நோய்களைத் தீர்க்க மருந்து சொல்லிய கோரக்கர் போன்ற சித்தர்கள் கூட, உள்ளங்கைகளில் தான் தேன் ஊற்றி, அதில் மருந்துகளை குழைத்து உண்ண சொல்லி இருக்கிறார்கள். கைகளுக்கும் வயிற்றுக்கும் உள்ள பந்தம் அப்படிப்பட்டது.

நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடையே நீர் அருந்தக்கூடாது. உள்ளங்கையில் நீர் வைத்து உறிஞ்சிக் குடிக்கும் பொழுது, தொண்டை நனையும். பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது. சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது. உணவு அருந்திய அரைமணி நேரம் கழித்த பிறகு தான் நீர் அருந்த வேண்டும். இதனால் நாம் அடையும் பலன், நோய்களைத் தவிர்க்கலாம் என்பது மட்டுமே. அதுதானே இன்றைய வாழ்க்கைக்கு அவசியம்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com