சுயம்புவாக தோன்றிய அரங்கநாதர்

கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.

காரமடையில் முன்பு காரை செடிகளும், தண்ணீர் மடைகளும் ஆங்காங்கே இருந்ததால் காரைமடை என்று பெயர் பெற்று, பிறகு மருவி காரமடை என ஆனது. காரை புதர்கள் நிறைந்து இருந்ததால் புற்களும் நிறைந்து இருந்தது.

அப்போது எர்ற கொல்ல தொட்டியர்கள் பசுக்களை இங்கு ஓட்டி வந்து மேய்த்துவிட்டு பால் கறப்பது வழக்கம். இப்பசுக்களில் பால் கொடுக்கும் காறாம் பசு ஒன்று மாலையில் வீடு திரும்பும்போது மடி வற்றி பால் இல்லாமல் இருப்பதை வெகு நாட்கள் கவனித்து வந்த தொட்டிய நாயக்கர் பசு மீது சந்தேகம் கொண்டு ஒரு நாள் பசு மேய்கிற இடத்திற்கு சென்றார்.

அந்த பசு காரை புதரில் பாலை சுரந்து கொண்டிருந்தது. பசு புதருக்கு பால் கொடுக்கிறதே என்ன ஆச்சரியம் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கொடுவாளை கொண்டு அவர் புதரை வெட்டினார். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொட்டிய நாயக்கர் மயங்கி கிழே விழுந்து விட்டார். பசுக்கள் மட்டும் வீடு திரும்பி விட்டன.

காலையில் சென்ற தொட்டிய நாயக்கர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த உறவினர்கள் இருட்டில் போவதற்கு துணிகளை பந்தமாக கட்டி எண்ணை ஊற்றி தீப்பந்தங்களை பற்றவைத்து கொண்டு மிருகங்கள் இருட்டில் பக்கத்தில் வராமல் இருக்க பறையடித்து கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் காரை வனத்திற்குள் தேடினார்கள்.

அப்போது அங்கு இருந்த புதரில் ரத்தம் பீறிட்ட இடத்தில் சிவப்பாக மடைபோல் காட்சி அளித்தது. மயக்கம் தெளிந்த தொட்டிய நாயக்கர் நடந்தவற்றை எல்லாம் கூறினார். மற்றவர்கள் புதரை விலக்கி, தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்த போது சுயம்பு லிங்கம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அப்போது அங்கு இருந்த தொட்டிய நாயக்கர்களில் ஒருவருக்கு அருள் வந்து ஆடி “நான் தான் அரங்கன், எனக்கு தான் பசு பாலை சுரந்து கொடுத்தது. என்னுடைய இடத்தை சுத்தம் செய்து கோவில் கட்டி வணங்குங்கள்” என்று கூற நின்றிருந்த தொட்டிய நாயக்கர்கள் தோல் பைகளில் தண்ணீர் கொண்டு வந்து இறைவன் மீது ஊற்றி பச்சை பந்தல் போட்டு வணங்கினர். வெட்டப்பட்ட அடையாளம் இப்போதும் மூலவரின் மேல் பக்கத்தில் உள்ளதை பார்க்கலாம்.

பின் பட்டர் வம்சத்தினர் தொட்டிய நாயக்கர்களுக்கு உதவியாய் இருந்து அரங்கனின் பெருமையை கூறினர். அதன் பின்னர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு பல கல்கார வேலைகளிலும், இத்திருக்கோவிலுக்கான மண்டபங்களிலும், தெப்பக்குள படிக்கட்டுகளிலும் மீன் சிற்பங்கள் இருப்பது மதுரை மன்னரால் கட்டப்பட்டது என்பதற்கு சாட்சியாகும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com