சொரிமுத்து அய்யனார்

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் காவல் தெய்வங்களான சுடலைமாடன், இருளப்பன், தளவாய்மாடசாமி, பூதத்தார், பிரம்மராட்சி, தூசிமாடன், பட்டவராயன், அகத்தியர், பேச்சியம்மன், கரடிமாடன் உள்ளிட்ட தெய்வங்களின் தாய்வீடாக திகழ்வது நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்துள்ள காரையார் சொரிமுத்தையன் கோயிலாகும். இந்த ஆலயம் ஐயப்பனின் ஆறுவது படைவீடாகவும் சொல்லப்படுகிறது. குலம் தெரிய வேண்டும் என்றால் உறவுக்காரர்களின் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும். குலதெய்வம் தெரிய வேண்டும் என்றால் சொரி முத்தைய்யன் கோயில் செல்ல வேண்டும். என்பார்கள். அந்த வகையில் பெரும்பாலான காவல் தெய்வங்கள் தங்கள் துணையுடன் வீற்றிருக்கும் ஸ்தலம் தான் சொரிமுத்து அய்யனார் கோயில்.

தென் மாவட்டங்களில் கிராம தெய்வங்களுக்கு பக்தர்களால் அளிக்கப்படும் கொடை விழா நிகழ்ச்சியில் வில்லிசை, மகுடம் நிகழ்ச்சிகள் இடம் பெறும். அந்த நிகழ்ச்சிகளில் விழா நடைபெறும் கோயிலின் மூலவர் அவதாரம் எடுத்த கதையும், அவர் இந்த ஆலயத்தில் நிலையம் கொண்டதை குறித்தும் கதைப்பாடலாக பாடுவர். அவ்வாறு பாடும் முன் சாஸ்தா கதையை பாடுவது மரபு. காரணம் அனைத்து காவல் தெய்வங்களுக்கும் சேனாதிபதியாக விளங்குபவர் சாஸ்தா. எனவே தான் சாஸ்தா ஆலயங்களில் பரிவார தெய்வங்களாக காவல் தெய்வங்கள் வீற்றிருக்கின்றனர். சாஸ்தாவை அய்யனாராக அழைக்கின்றனர். அந்த வகையில் சொரிமுத்து ஐயனார் கோயிலிலும் சாஸ்தாவை, ஐயனார் என்றே அழைக்கின்றனர். சாஸ்தா, ஐயனார், ஐயப்பன் மூவரும் ஹரிஹரன் பெற்ற மைந்தர்கள் தான். ஆனால் மூவரும் வெவ்வேறு அவதாரங்கள்.

சாஸ்தா அவதாரம்: மனித குலத்தின் முதல்வர்களாக மனுவும், சதரூபையும் தோன்றினர். அவர்களுக்கு மகனாக பிறந்த காஸ்யப முனிவருக்கு திதி, அதிதி என இரு பத்தினிகள். அதிதிக்கு தேவர்களும், திதிக்கு அசுரர்களும் மக்களாய் பிறந்தனர். பிறப்பால் தேவர்களும், அசுரர்களும் சகோதரர்களே என்றாலும், குணத்தால் வேறுபட்டு, பகைமை உணர்வுடன் எப்போதும் ஒருவரையொருவர் எதிர்த்து வந்தனர். மும்மூர்த்திகள் உதவியுடன் அமராவதியை கைப்பற்றிய தேவர்கள் அதை ஆண்டு வந்தனர். தலைவனாக இந்திரன் திகழ்ந்தான். தவ வலிமை மிக்க ரிஷி தம்பதிகளான அத்ரி அனுசூயாக்கு மகனாக பிறந்த துர்வாச மஹரிஷி இந்திரனைக்காண வருகிறார். அப்போது பராசக்தியின் ப்ரஸாதமான மலர்மாலை ஒன்றை கொண்டு வருகிறார்.

அந்த மாலையை தன்னை வரவேற்ற இந்திரனிடம் அளித்தார். அவன் அந்த மாலையை பொருட்படுத்தாமல் தனது வெள்ளை யானையான ஐராவதத்தின் மத்தகத்தில் சூட்டினார். மாலையில் இருந்து வீசிய நறுமணத்தால் வண்டுகள் யானையின் தலையின் மேலே ரீங்காரமிட, கோபமடைந்த ஐராவதம், அந்த மாலையை கீழே போட்டு காலால் மிதித்தது. அதைக்கண்டு துர்வாசர் கொதித்தெழுந்தார்.‘‘இந்திரா நான் கொடுத்த மாலையை நீ மதிக்க தவறிவிட்டாய், மூவுலகுக்கும் அதிபதி என்ற ஆணவத்தால் இப்படி நடந்து கொண்டாய், என் சாபத்தால் தேவ, அசுர, மானிட லோகங்களான மூன்று லோகங்களும், சோபையையும், மங்கலத்தையும் இழக்கட்டும். தேவர் குலமே தங்கள் திவ்ய சக்திகளை இழந்து நரை, திரை, மூப்புக்கு உள்ளாவீர்கள்.

ஐராவதமும் காட்டானை ஆகட்டும்.’’ என்று சபித்தார். இந்திரன் எவ்வளவோ மன்றாடியும் கூட துர்வாசர் சமாதானமடையாமல் சென்றார். ஐராவதம் காட்டானையாகி மதம் கொண்டு திரிய துவங்கியது. தேவர்கள் அழகு இழந்து, நரை விழுந்து, முதுமை கொண்டனர். தேவர்கள் முதுமையடைந்த செய்தி அசுரர்களை மகிழ்ச்சியடையச் செய்தது. இது தான் தக்க தருணம் என்று மலகன் எனும் அரக்க மன்னன் தலைமையில் அசுரர்கள், தேவர்களை எதிர்த்து போரிட்டனர். சக்தியிழந்த தேவர்கள் தோற்றோட, அசுரர்கள் அமராவதியை கைபற்றினர். இதையடுத்து தேவர்கள் மும்மூர்த்திகளை பணிந்தனர்.

தேவர்களிடம், நீங்கள் இழந்த சுபிக்ஷத்தை அடைய, பல அற்புத மூலிகைகளை பாற்கடலில் இட்டு கடையுங்கள். திருப்பாற்கடலை கடைந்தால் அம்ருதம் கிட்டும். அதை அருந்தினால் உங்களுக்கு நிகரற்ற வலிமையும், மரணமற்ற வாழ்வும் திவ்யத்துவத்தையும் நிலை பெறச்செய்யும் என்று வழி கூறினார் வாசுதேவன். சக்தியனைத்தையும் இழந்து முதுமை பெற்றிருக்கும் தேவர்களால் அது எப்படி முடியும். அதனால் தயக்கம் காட்டினர். பரந்தாமன் அதற்கும் வழி கூறினார். மந்தர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு, அசுரர்கள் துணையுடன் பாற்கடலை கடையுங்கள் என்றார். பாற்கடலை கடையும் பணி தொடங்கியது. இறுதியாக பகவான் கிருஷ்ணன் தன்வந்தரி வடிவத்தில் கைகளில் அம்ருத கலசத்தினை ஏந்தி தோன்றினார். அசுரர்கள் அம்ருதத்தை அவரிடமிருந்து பலவந்தமாக அபகரித்துக் கொண்டனர்.

இருவர் செய்த உழைப்பின் கூலியை ஒருவர் மட்டுமே எடுப்பதை, அதுவும் பலவந்தமாக அபகரித்ததை பகவானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்ருதத்தில் ஒரு துளி கூட அசுரர்கள் இனி அருந்த கூடாது என்றெண்ணி, பரமேஸ்வரியை நினைத்து தியானித்தார். பின்னர் அற்புதமான பேரழகுடன் மோஹினி வடிவெடுத்து தோன்றினார். அசுரர்கள் முன் நின்றார். அப்போது அம்ருதத்திற்காக அசுரர்களும், தேவர்களும் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டிருந்தனர். மோஹினியின் பேரழகை கண்டு திகைத்து நின்றனர். மோஹிகினி பேசினாள்’’ எதற்கு சண்டை, வரிசையில் அமருங்கள் நானே பங்கிட்டு தருகிறேன். என்று கூறி அம்ருதத்தை தேவர்களுக்கு முதலில் வழங்கினார். அதை உண்ட தேவர்கள் இழந்த இளமையையும், சுயரூபத்தையும் கொண்ட தோடு தேக வலிமையும், மரணமில்லா வாழ்க்கையையும் பெற்றனர்.

இதனிடையே ஸம்ஹிகேயன் எனும் அரக்கன், தேவர் போல உருமாறி, அவர்களிடையே அமர்ந்து அம்ருதத்தை பெற்று விட்டான். அவனை சூரியனும், சந்திரனும் அடையாளம் காட்ட, அவள் தன் கையில் இருந்த கரண்டியாலே அவன் தலையை கொய்தாள். அம்ருதம் உண்ட சக்தியினால் அவன் இறவாமல் தலை வேறு, உடல் வேறாகி கிடந்தான். பின்னர் தலைக்கு நாக உடலும், உடலுக்கு நாக தலையும் பெற்று ராகு, கேது கோள்களாகி கிரக பதவி பெற்றான். அம்ருதம் உண்ட தேவர்கள், அசுரர்களை வென்று மீண்டும் தேவேந்திரன் மூவுலகையும் ஆட்சி புரியலானான். அசுரர்கள் பாதாள உலகில் வாழலாயினர். நடந்தவைகளை நாரதர், பரமேஸ்வரனிடம் கூறினார். அடுத்து ஈசன் உமா தேவியுடன் பரந்தாமனை காண பாற்கடல் வந்தார்.

அகிலத்தையே மயக்கிய மோஹினி அவதாரத்தை எனக்கு காட்ட வேண்டும் என்றார். அடுத்திருந்து நந்தவனத்தில் ஈசனிடம், பரந்தாமன் தான் எடுத்த மோஹினி அவதாரத்தை காட்டினார். அரியும், அரனும் சங்கமமாகினர். அரிஹர சக்தியும் ஒருங்கே பெற்று மஹா சாஸ்தா அவதரித்தார். சாஸ்தா பூலோகம் வருதல்: நேபாள தேசத்தை ஆண்டு வந்த மன்னன் பளிஞ வர்மன். மாகாளியின் பக்தனாவார். இவர் மாகாளி கோயில் கொண்டுள்ள உஜ்ஜயினி நகரத்தின் இளவரசி சாந்தையை மணமுடித்தார். மாகாளியின் அதிக பக்தி கொண்டதன் காரணமாக உயிர்களை பலியிட தொடங்கினான். இதனைக் கண்டு மனம் வெறுப்புற்ற மன்னனின் மனைவி சாந்தை, தான் வணங்கி வந்த சிவனிடம் மனமுருகி வேண்டினாள். அன்றிரவு அரசியின் கனவில் தோன்றிய சிவபெருமான்.

மகளே மனம் கலங்காதே, உன் மணாளனை மனம் திருத்த, என் மைந்தனே வருவான். சிவன்விஷ்ணு ரூபமான அவன் அம்பிகையின் ரூபமாக உனக்கு பிறக்கப்போகும் மகளை மணமுடித்து, உன் கணவனை நல்வழிப்படுத்துவான். என்று கூறினார். அது போலவே பெண் குழந்தை பிறந்தது. மன்னன் பளிஞன். மாகாளியின் அருளினால் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என்று கருதினான். ஸ்ரீ புஷ்கலை என்று பெயரிட்டு ஸ்ரீ புஷ்கலா என அழைத்து வந்தான். காலம் உருண்டோடியது. புஷ்கலா பருவ வயதை அடைந்தாள். மன்னன் தனது தலையில் முடி நரைத்ததை கண்டு வருந்தினான். தனக்கு முதுமை வந்து விட்டதை எண்ணி வருந்தினான். தான் மாறா இளமையுடன் இருக்க விரும்பினான். அதற்கு காண்போரிடத்திலெல்லாம் ஆலோசனை கேட்டான். அதில் ஒருவன் கூறினான். ஸர்வ லக்ஷணங்கள் கொண்ட மணமுடிக்காத மங்கையர்கள் நூற்றி எட்டு பேரை, மாகாளிக்கு பலியிட்டால், காளி தேவி காட்சி கொடுப்பாள்.

அப்போது மாறாத இளமையை வரமாக பெற்று விடலாம். என்று அவன் கூறியதைக் கேட்ட மன்னன் அதன்படி செய்யலானான். உடனே நூற்றி எட்டு கன்னியரை சிறை பிடிக்க உத்தரவிட்டான். கயிற்றால் கட்டி நூற்றி எட்டு பேரையும் கோயிலுக்கு கொண்டு வந்தனர் காவலாளிகள். முதல் பெண்ணை பலி கொடுக்க தயாராகினர். காளியின் முன் நிறுத்தப்பட்டிருந்த அந்த பெண், சங்கு அறுபட முன் சங்கரனை வேண்டினாள். காக்க வேண்டிய மன்னன், கழுத்தறுத்து பலியிடப் போகிறான். இந்த சண்டாளனிடமிருந்து, காக்க வேண்டும் கங்காள என்று பரமனை வணங்கி அழுதாள், தொழுதாள். சினம் கொண்ட சிவன், தனது மகன் சாஸ்தாவை அனுப்பி பக்தர்களை காத்தருளும் படி, பூலோகம் அனுப்பி வைத்தார். சாஸ்தா வந்தார். கன்னியர்களை விடுவித்து காத்தருளினார். தனது நரபலி பூஜைக்கு இடையூறை ஏற்படுத்தியவனை விடக்கூடாது என்று வெகுண்டெழுந்த மன்னன் பளிஞன், சாஸ்தாவோடு சண்டையிட்டான். அவனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

முடிவில் சாஸ்தா தனது சுயரூபத்தை காட்டினார். மனத்தெளிவு பெற்ற மன்னன், மண்டியிட்டு வணங்கினான். சாஸ்தாவை பணிந்தான். அன்னையின் அருள்பெற அன்பு போதும். நரபலி ஆகாது என்று அறிவுறுத்தினார். மன்னன் கூறினான். நான் தங்களுக்கு ஆண்டு தோறும் விருந்தோம்பல் செய்ய வேண்டும். இதே நிலையில் பிறப்பு, இறப்பு, மூப்பு இவைகளை கடந்து நான் உங்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் என் மகளை மணமுடிக்க வேண்டும் என்று கூறினார். அதன்படியே ஆகட்டும் என்று அய்யன் சாஸ்தா அருளினார். பார்வதி பரமேஸ்வரரும், திருமகளும் திருமாலும் கூடி முடிவு செய்து, பிரம்மதேவனால் முகூர்த்த ஓலை எழுதப்பட்டது. உலகில் எங்குமே நடந்திடாத வண்ணம் கோலாகலமாக திருமண ஏற்பாடுகள் நடந்தேறின.

ஸ்ரீ பூர்ணா வை சாஸ்தா திருமணம் செய்தல்: வஞ்சி தேசத்தை ஆண்டு வந்த மன்னன் பிஞ்சக வர்மன். இவர் சிந்த தேசத்தின் மன்னன் மகள் மனோஞை என்பவரை மணமுடித்தார். இவர்களுக்கு மஹாலட்சுமியின் அம்சமாக பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு ஸ்ரீ பூர்ணா என்று பெயர் சூட்டினார். அவள் இளம் வயது முதலே சாஸ்தாவின் புகழை கேட்டு வளர்ந்த பூரணை தன் மனதில் அவரையே மணாளனாக எண்ணி பூஜித்து வரலானாள். இந்த நிலையில் மன்னன் பிஞ்சகன், மகள் மணப்பருவத்தை எட்டியதும், அவளுக்கேற்ற மணவாளனை தேடும் பணியில் தீவிரமானார். இதை அறிந்த பூரணை, தன் தந்தையிடம் தனது விருப்பத்தை கூறினாள். மனித குலத்தில் பிறந்தவர் மஹா சாஸ்தாவை மணப்பது எப்படி சாத்தியமாகும்.

என்று எண்ணி மன்னன் மிகுந்த துயரத்தில் இருந்தார். இந்நிலையில் வனப்பகுதியை யொட்டியுள்ள கிராமங்களுக்குள் புலி ஊடுருவி, கிராம வாசிகளை அச்சுறுத்துவதை அறிந்த மன்னன், அப்புலியை வேட்டையாட காட்டுக்குச் சென்றான். கண்ணில் தென்பட்ட புலியை விடாமல் துரத்தினான். இருள் சூழ்ந்தது. புலிக்கு பின்னால் சென்ற மன்னன் வழி தவறி, அடர்ந்த காட்டிற்குள் சென்று விட்டான். கானகத்தில் பேய்களும், பூதங்களும் நிறைந்திருக்கும் பகுதிக்கு சென்ற மன்னனை, பூதங்கள் சுற்றி வளைத்துக் கொண்டு அச்சுறுத்த துவங்கியது. தான் மரண தருவாயில் இருப்பதை உணர்ந்த மன்னன் பூதங்களை அடக்கி ஆளும், பூத நாதனை வேண்டினான். பூத நாதன் சாஸ்தா வந்தார். அவரைக்கண்டு பேய்கள் ஓடி ஒளிந்தன. பூதங்கள் வணங்கி நின்றன.

சாஸ்தாவின் அருளால் காப்பாற்றப்பட்ட மன்னன். சாஸ்தாவிடம் தனது மகள் பூரணை தங்களை நினைத்து உருகுவதாகவும், அவளை மணமுடிக்க வேண்டும் என்று வேண்டி அவர் பாதம் பணிந்தான். சாஸ்தா மன்னனிடம் ‘‘ மன்னா, நீ முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாகவே பூரணை உனக்கு மகளாக தோன்றியிருக்கிறாள். மஹாலட்சுமியின் ரூபமான அவளை தகுந்த நேரத்தில் முறைப்படி மணம் செய்து ஏற்றுக்கொள்வேன்’’ என்று கூறினார். பின்னர் ஒரு சிவனடியார் வேடம் கொண்டு, தன்னை நினைத்து பூஜித்துக் கொண்டிருந்த பூர்ணையிடம் சாஸ்தா சென்றார். அவரைக் கண்டதும், வாருங்கள் சிவனடியாரே என்று வணங்கி வரவேற்றாள் பூரணை, சுவாமி, மஹா சாஸ்தா எனக்கு மாலையிட்டு மனைவியாக என்னை ஏற்றுக்கொள்ள நீங்கள் தான் ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேண்டினாள். அதற்கு சிவனடியார் உருவில் இருந்த சாஸ்தா, “பெண்ணே, நீ கேட்ட படி, உன்னை வாழ்த்த என் மனம் மறுக்கிறது.

பேரழகில் சிறந்த உனக்கு மணவாளனாக இருக்க தகுதி அந்த சாஸ்தாவுக்கு இல்லையம்மா, ஹரிஹரபுத்ரன் இரு ஆண்களுக்கு பிறந்தவன் என்று கூறுகிறார்கள்.
ஐயா, நிறுத்துங்கள், தெய்வ லீலைகளின் தத்துவங்களை கூட உணர முடியாத நீர் எப்படி ஒரு சிவனடியாராக இருக்க முடியும்? ஒரே சக்தி தான் பெண்ணுருவில் பராசக்தியாகவும், ஆணுருவில் பரந்தாமனாகவும் காட்சி தருகிறது. அதை புரிந்து கொள்ளுங்கள். சரிம்மா, சாஸ்தா, ஏற்கனவே நேபாள மன்னன் மகள் புஷ்கலையை மணமுடித்துள்ளாரே, சாதாரண மானிடராக இல்லாத மஹா சாஸ்தாவுக்கு இரு தாரம் என்பது பெரிதல்ல, அவர் இல்லாமல் நானில்லை.. என்று கூறியதும், சிவனடியார் ரூபத்தில் இருந்த சாஸ்தா. தனது சுயரூபத்துடன் தோன்றி, பூரணி உன்னோடு சிறிது நேரம் விளையாடும் பொருட்டு, ஒரு நாடகம் நடத்தினேன். விரைவில் உன் எண்ணம் போல் முறைப்படி உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன் படி மும்மூர்த்திகள் ஆசியுடன் ஸ்ரீ பூர்ணாவை சாஸ்தா திருமணம் செய்து கொண்டார்.

அய்யனார் அவதரித்தல்: பூலோகத்தில் தாருகா வனம் என்னும் பகுதியில் தவ முனிவர்கள், தங்கள் பத்தினியுடன் வாழ்ந்து வந்தனர். (இந்த தாருகா வனம் திருச்சியிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது) இந்த வனத்தில் வாழ்ந்த முனிவர்களுக்கு தங்கள் தவத்தின் வலிமையே உயர்ந்தது. அபார சக்தி கொண்டது என்ற கர்வம் இருந்தது. அவர்களின் பத்தினிகளோ, கற்பு நெறியில் தங்களுக்கு இணை, எவரும் இல்லை என்று இறுமாப்புடன் இருந்தார்கள். நாம் செய்யும் கர்மமே அதற்குண்டான பலனை தானே கொடுக்கும். அதற்கு இறைவன் என்ற ஒரு சக்தி தேவையில்லை என்று எண்ணிய அவர்கள் பரமனையோ, பரந்தாமனையோ வணங்க மறுத்து பெரும் ஆணவம் கொண்டு வாழ்ந்திருந்தார்கள். ஆணவத்தின் மிகுதியால் அறிவிழந்த முனிவர்களுக்கு நல்லறிவு புகட்ட, மகாதேவனும், மகாவிஷ்ணுவும் முடிவு செய்தனர்.

ஆணழகனாக, வாலிப பருவம் கொண்டு, காண்பவரை கவர்ந்து இழுக்கும் அழகு வடிவத்து பிக்ஷாடனர் திருக்கோலத்தை சிவனார் கொண்டார். பொன்னிற மேனியாக, பேரழகுடன் மோஹினி அவதாரம் எடுத்தார் திருமால். இருவரும் தாருகாவனம் வந்தனர். தாருகாவனத்தில் இருந்த தவ முனிவர்களின் யாக சாலைக்குச் சென்றாள் மோஹினி. அவளது கால் கொலுசு மணிகளின் ஓசைகேட்டு திரும்பிய முனிவர்கள் வியப்புற்றனர். யாகத்தை விட்டெழுந்தார்கள். மோஹினியை பின் தொடர்ந்து முனிவர்கள் வந்தனர். இங்கே இப்படி இருக்க, முனிவர்களின் வசிப்பிடம் அமைந்த பகுதிக்கு கட்டிளம் காளையாக, கரம் தனில் வீணையை ஏந்தியபடி, தனது இதழ்கள் தேவகானம் இசைக்க, முனிவர்களின் இல்ல வாசலில் நின்று பிச்சை கேட்டார்.

உலகத்திற்கே படியளக்கும் எம்பெருமான் சிவபெருமான் பிச்சாடனார் ரூபத்தில். முனிவரின் பத்தினி தர்மம் கொண்டு வந்து பார்த்தார். என்ன அழகு, இப்படி ஒரு இளைஞனை இதுவரை யான் காண்கிலேன் என வியந்தார். அடுத்தடுத்த இல்லங்களில் இருந்த ரிஷி பத்தினிகளிடம் எடுத்து இயம்பினாள். அவர்களும் அந்த ஆச்சரியத்தை காண விரைந்து வந்தனர். அவரவர் இல்ல வாயிலில் நின்ற ரிஷி பத்தினிகள் ஒன்றாக கூடி பிச்சாடனரின் தேவகானத்தை ரசித்து கேட்ட படி, அவரை பின் தொடர்ந்தனர். மன்மதனுக்கே தலைவனவன் அழகை கண்டு மயங்கி, ரிஷி மனைவிகள் தங்கள் மேலாடை நழுவி விழுவதை கூட தெரியாமல் வருவதை, எதிரே மோஹினியின் அழகில் மோகப்பித்து பிடித்து பின் தொடர்ந்து வந்த முனிவர்கள் கண்டு மனம் வெதும்பினர்.

அந்த காட்சியை கண்டதும், கோபம் பொங்கிட இயல்பு நிலைக்கு வந்தனர். ரிஷிகளாகிய நமது தவத்தை அழித்து, தமது மனைவிமார்களின் கற்பு கெடும் விதத்தில், அவர்களை மயக்கியது இந்த பிச்சைக்காரன் தான். இவன் சதி வேலையின் காரணமாகத்தான் இந்த பெண்ணும் நம்மை மயக்க வந்திருக்கிறாள் என்று எண்ணிய அவர்கள் பிச்சாடனரை நோக்கி, பல ஆயுதங்களை உருவாக்கி ஏவினர். அந்த ஆயதங்களை தடுத்து தகர்த்தெறிந்தார் பிச்சாடனார். அடுத்து புலியை ஏவினர் ரிஷிகள். அதை மடக்கி, அடக்கி ஆயுளை முடக்கி அதன் தோலை தனத்து ஆடையாக அணிந்து கொண்டார் சிவன். தொடர்ந்து முனிவர்களால் அனுப்பப்பட்ட மழுவையும், மானையும் தனக்கு ஆயுதங்களாக தன் கைகளில் ஏந்திக்கொண்டார்.

பின்னர் கொடும்பாம்புகளை ஏவினர் ரிஷிகள். நஞ்சைக் உமிழ்ந்த படி வந்த பாம்புகளை தன் உடலில் ஆபரணமாக்கி அணிந்து கொண்டார் நாகாபரணனார் சிவபெருமான். கடைசியாக முனிவர்களால் அனுப்பப்பட்ட அக்னியையும், டமருகத்தையும் தனது கைகளில் வாங்கிக்கொண்டார் பிச்சாடனார். தங்கள் முயற்சிகள் யாவும் பலனற்றுப் போனதைக் கண்ட முனிவர்கள் தலை குனிந்து நின்றார்கள். மேலும் அவர்களை சோதிக்க வேண்டாம் என்று எண்ணிய ஈசன் தனது விஸ்வரூபத்தை காட்டியருளினார். சிவனாரின் தரிசனம் கண்டு, சிந்தை தெளிந்த ரிஷிகள் தங்கள் செய்வதறியாது நிகழ்த்திய தவறினை மன்னிக்கும்படி மன்றாடி வேண்டினார்கள். தங்களை யாரென்று அறியாமல் தவறிழைத்து விட்டோம். எங்களை மன்னித்து தாங்கள் அருள வேண்டும். ஈஸ்வரன் பேசலானார் “ரிஷிகளே! நீங்கள் கடவுளை விட கர்மா தான் பெரிது என்று எண்ண முற்பட்டதனால், கர்மாவை விட, எல்லாவற்றையும் விட கடவுள் எனும் ஆத்மா, சக்தி மிகப்பெரியது என்ற உண்மையை உணர்த்தவே நாம் இந்த நாடகமாடினோம். நீங்கள் அறியாத செய்த தவறினை மன்னித்தோம்.

இனி வேத நெறி வழுவாமல் எம்மை ஆராதித்து நற்கதியடையுங்கள் என்று வரமளித்து அவ்விடம் விட்டு ஈஸ்வரன் அகன்றார். தாருகாவனம் விட்டு வெளியேறிய பின் மோஹினியாக இருந்த மகாவிஷ்ணு, சிவனாரை நோக்கி, “சுவாமி, கற்பு நெறியில் கர்வம் கொண்ட முனி பத்தினிகளைக் கூட மயக்கி விடும்படி அமைந்த அந்த பிச்சாடனர் கோலத்தை நான் காண மீண்டும் காண விரும்புகிறேன். எனவே அக்கோலத்தை காட்டியருள வேண்டும் என்று வேண்டினாள். சிவனாரும் அந்த அழகு தேக வடிவான பிச்சாடனர் கோலம் கொண்டார். ஈசனின் கோலம் கண்டு, அந்த அழகில் மயங்கிய மோஹினி, “அழகேசனே! உங்களின் பேரழகு என்னை மயக்குகிறது என்று தாவி அணைத்தாள். இரு சக்திகளும் சங்கமம் ஆகின. பெண் வடிவில் இருந்த அய்யனும், அரனாரும் இணைந்திருக்க அய்யனார் அவதரித்தார்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com