சோளிங்கர் ஸ்தலத்தில் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் வழிபட்டால் துர்தேவதைகளினால் பீடிக்கப்பட்ட பேய், பிசாசு, சூன்யம் போன்றவைகள் விலகும்.
ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட புகழ் பெற்ற திருத்தலங்கள் 108. இவை திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 திவ்ய தேசங்களில் சோளிங்கர் மிகவும் பிரசித்தி பெற்ற திவ்யதேசமாகும்.
சோளிங்கரின் பெயர் புகழுக்கு காரணம் அங்கு இரண்டு தனித்தனி மலைகளில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரும், ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் இருப்பதுதான். பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மரும், லட்சுமியும்.சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் நமக்குக் காட்சி அளித்து, அருளை வாரி வழங்குகிறார்கள்.
பெரிய மலையில் கார்த்திகை மாதத்தில் வெள்ளி முதல் ஞாயிறு வரை உள்ள நாட்கள் மிகவும் பிரசித்தம். இந்த மாதத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் யோகத்தை கலைத்து, கண் திறந்து பார்ப்பதால் கார்த்திகை சோளிங்கர் பயணமும் நரசிம்மர் தரிசனமும் மிகவும் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. தீராத நோயுள்ளவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் மலை அடிவாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் குளித்து விட்டு 1305 படி ஏறி நரசிம்ம சாமியை தினம் 108 முறை பிரதட்சணம் செய்தால் ஸ்ரீயோக நரசிம்மனே அவர்கள் கனவில் வந்து குறை தீர்ப்பதாகத் தல புராணம் கூறுகிறது.
108 பிரதட்சணம் செய்பவர்கள் வசதிக்காக கோவிலின் மூன்றாவது பிரகாரம் மட்டும் அதிகாலையே திறப்பது வழக்கம். எந்த நிலையிலும், எவருக்குமே இரவில் மலை மேல் தங்க அனுமதி இல்லை.
துர்தேவதைகளினால் பீடிக்கப்பட்ட பேய், பிசாசு, சூன்யம் போன்றவைகள் இந்த ஸ்தல பெருமாளை வழிபட்டால் விலகும். நோய்கள் மூலம் அவஸ்தைப்படுகிறவர்கள் தினமும் அடிவாரத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி மலை மீது ஏறி பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் அந்த நோய்கள் அனைத்தும் விலகும் என்பது மிகுந்த நம்பிக்கை.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.