தஞ்சையில் 24 பெருமாள் கருடசேவை விழா 25-ந்தேதி நடக்கிறது

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோவில்களுள் தஞ்சை மாமணிக்கோவில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களுள் 3-வதாக விளங்கும் மேலசிங்க பெருமாள், நீலமேகப் பெருமாள், மணிக்குன்ன பெருமாள் கோவில்களில் கருடசேவை அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, ராமானுஜதர்சன சபை சார்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இதன்படி 85-வது ஆண்டாக இந்த ஆண்டு கருடசேவை வருகிற 25-ந் தேதி நடக்கிறது. விழாவின் தொடக்கமாக வருகிற 24-ந் தேதி வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடக்கிறது.

25-ந் தேதி தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 18 பெருமாள் கோவில்கள் மற்றும் ஏனைய 6 கோவில்கள் என மொத்தம் 24 பெருமாள் கோவில்களில் இருந்து கருடவாகனத்தில் பெருமாள்கள் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலையை வந்தடைவார்கள்.

அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானை தொழுதவண்ணம் முதலில் செல்லும். அதைத்தொடர்ந்து நீலமேகப் பெருமாள் லட்சுமியுடன் செல்ல, இவர்களை தொடர்ந்து நரசிம்ம பெருமாள், வெண்ணாற்றங்கரை மணிக்குன்றப் பெருமாள், வேளூர் வரதராஜபெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், கரந்தை யாதவகண்ணன், கொண்டிராஜபாளையம் யோகநரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள், அய்யங்கடைத்தெரு பஜார் ராமசாமி பெருமாள், எல்லையம்மன் கோயில்தெரு ஜனார்த்தன பெருமாள்,

கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாத பெருமாள், மேலவீதி விஜயராம பெருமாள், நவநீதகிருஷ்ணன், சக்காநாயக்கன்தெரு பூலோக கிருஷ்ணன், மகர்நோம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்ட ராமசாமி பெருமாள், சுங்கான்திடல் லட்சுமி நாராயண பெருமாள், கரந்தை வாணியத்தெரு வெங்கடேச பெருமாள், கொள்ளுப்பேட்டைத்தெரு வேணுகோபாலசாமி ஆகிய பெருமாள்களும் கருடவாகனத்தில் புறப்பட்டு தஞ்சை ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

26-ந் தேதி நவநீத சேவை நடைபெறுகிறது. இதனை வெண்ணெய்தாழி மகோற்சவம் என்றும் அழைப்பர். 15 பெருமாள்கள் நவநீத சேவையில் புறப்பட்டு கொடிமரத்து மூலையை வந்து அடைகிறார்கள்.

பின்னர் அங்கிருந்து கீழராஜ வீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜ வீதி, வடக்கு ராஜவீதி ஆகிய வீதிகள் வழியாக அனைவருக்கும் காட்சி அளித்து வந்த வழியே அவரவர் கோவில்களுக்கு சென்றடைவர். 27-ந் தேதி விடையாற்றி விழா நடக்கிறது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com