தஞ்சை பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதனையொட்டி தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில்தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதற்காக பல்வேறு திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றது. கடந்த மாதம் 27-ந் தேதி யஜமான அனுக்ஞை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து பூஜைகள் நடந்து வருகின்றன.

முதல்கால யாகசாலை பூஜை கடந்த 1-ந் தேதி மாலையில் தொடங்கியது. யாகசாலை பூஜையை காண்பதற்கு தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணமாக உள்ளனர். நேற்று மாலை வரை 3 நாட்களில் யாகபூஜையை 2 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை(புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. பின்னர் காலை 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானமும், 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகமும், 10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பெரியநாயகி, பெருவுடையாருக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது.

கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்காக தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் பணி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக 21 இடங்களில் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கும்பாபிஷேக தினத்தன்று 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கும்பாபிஷேக விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com