திருக்கருகாவூர்

இறைவர் திருப்பெயர்: கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்:

கர்ப்பரட்சாம்பிகை

தல மரம்: முல்லை.
தீர்த்தம் : க்ஷீரகுண்டம், சத்திய கூபம், பிரமதீர்த்தம் முதலியன
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர்,பிரமன், கௌதமர், சந்திரன் ஆகியோர்.

தல வரலாறு

   • ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் – கருகாவூர் என்று பெயர் பெற்றது.

 

 

   • மாதவி வனம் என்று குறிப்பிடப்படும் இத்தலம் முல்லைக்காடாக விளங்கியது.

   • இத்தலத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மூன்று அடி நடந்தால் முதலாவது அடியால் பாவ வினைகள் முழுதும் அகலும் என்றும், இரண்டாவது அடியால், அமரர் உலகையும் பெறலாம் என்றும், மூன்றாவது அடியால் சிவசாயுஜ்ஜியம் பெறலாம் என்றும் தலபுராணம் குறிப்பிடுகிறது.
   • இத்தலத்தை நினைத்தாலும், இதன் பெயரைச்சொன்னாலும் , அதனைக் கண்டாலும், அங்கு வசித்தாலும், இதன் வழியாகப் பிற ஊர்களுக்குச் சென்றாலும் பாவங்கள் நீங்கப்பெற்று, போகங்கள் யாவும் பெற்று, நிறைவாக இறைவன் கழலடியை அடைவர் என்கிறது தலபுராணம்.
   • வடக்கு பிராகாரத்தில் ஸ்தல விருக்ஷமான முல்லை உள்ளது. சபா மண்டபம் குதிரை பூட்டிய ரத வடிவில் உள்ளது. இங்கு நித்துருவர்,கார்க்கியர், சங்குகர்ணன் ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்கள் உள்ளன.
   • நிருத்துருவமுனிவரின் பத்தினி வேதிகை, கர்பகாலத்தில் நேர்ந்த அயர்ச்சியால், அங்கு வந்த ஊர்த்துவபாத முனிவரை உபசரிக்க  இயலாமல் போகவே, கோபம் கொண்ட முனிவர், அவளது கர்ப்பம் சிதையுமாறு சபித்தார். அதனால் துயரமுற்ற தம்பதியர்,இறைவனையும் இறைவியையும் சரணடைந்து துதிக்கவே, வேதிகையின் கரு சிதையாமல் அம்பாள் காத்து ரக்ஷித்தபடியால் கர்ப்ப ரக்ஷாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.
   • அகந்தையால் படைப்புத் தொழிலை இழந்த பிரமன் இங்கு வந்து,தன் பெயரால் தீர்த்தம் அமைத்து,இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்புத் தொழிலைக் கைவரப்பெற்றான்.
   • கேரள தேசத்தைச் சேர்ந்த சுவர்நாகரன் என்பவன் சாபத்தால் பைசாச வடிவம் கொண்டு பல பிறவிகள் துன்புற்ற பின்னர், கார்க்கிய முனிவரின் அறிவுரைப்படி இத்தலத்திற்கு வந்து,பிரம தீர்த்தத்தில் நீராடி,இறைவனை வழிபட்டதால் பழைய வடிவை மீண்டும் பெற்றான்.
   • கோஹத்தி தோஷம் நீங்க வேண்டி கௌதம முனிவர் இத்தல இறைவனை வழிபட்டு,நற்கதி பெற்றார்.
   • சாபத்தினால் புலி வடிவம் கொண்ட குஜத்வஜன் என்ற மன்னன் கார்த்திகை ஞாயிறுகளில் இறைவனை வழிபட்டுப் பழைய வடிவம் பெற்று, வைகாசியில் பிரம்மோற்சவ விழா நடத்தினான்.
   • குரு சாபத்தால் பேய் உருவம் பெற்ற சங்கு கர்ணன் என்பவன் முல்லைவன நாதரை மார்கழித் திருவாதிரையன்று வழிபட்டுப் பழைய உருவம் பெற்றான்.
   • தக்ஷ சாபம் நீங்க வேண்டிச் சந்திரன் வழிபட்டான். இன்றும் பங்குனி மாதப் பௌர்ணமியில் சந்திரனின் கிரணங்கள் இறைவன் மீது படுவதைக் காணலாம்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	முத்தி லங்குமுறு வல்லுமை. 
				 2. அப்பர்  -	குருகாம் வயிரமாங் கூறு.
தல மரம் : முல்லை

சிறப்புகள்

   • இங்கு தலவிநாயகராக கற்பகவிநாயகர் உள்ளார்.
   • முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். 
   • கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.
   • இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.
   • காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று; அவை:- 1. கருகாவூர் – முல்லைவனம், 2. அவளிவணல்லூர் – பாதிரிவணம், 3. அரதைப்பெரும்பாழி – வன்னிவனம், 4. இரும்பூளை – பூளைவனம், 5. கொள்ளம்புதூர் – வில்வவனம் என்பனவாம். (இவ்வைந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கமும் வழக்கில் உள்ளது.) 
   • ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.
   • இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கமும் உள்ளது. 
   • மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது. 
   • இங்குள்ள நந்தி – உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
   • தேவகோஷ்டங்களில் மேற்கில் அர்தநாரீஸ்வரரும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும் சிறப்பு வாய்ந்த மூர்த்தங்கள்.
   • இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. 
   • கருவுற்ற பெண்களுக்குச் சுகப்பிரசவம் உண்டாகும் பொருட்டு, ஸ்ரீ கர்ப்பரக்ஷ£ம்பிகையின் திருவடியில் வைத்து, மந்திரித்து விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ வலியேற்படும் காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, சுகப்பிரசவமாகும்.
   • சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன. 
   • முதலாம் இராசராசன் கல்வெட்டில் “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் ” என்று தலம் குறிக்கப்படுகின்றது.
   • கோவிலுக்கு எதிரில் உள்ளதும்,காமதேனுவின் பாலால் ஏற்பட்டதுமான பால் குளத்தில் சிவராத்திரியன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஊருக்குத் தென்மேற்கிலுள்ள பிரம தீர்த்தத்தில் நடராஜப்பெருமான் மார்கழித் திருவாதிரையிலும் முள்ளிவாய்,விருத்த காவேரி என்று அழைக்கப்படும் வெட்டாற்றின் படித்துறையில் வைகாசி விசாகத்தில்  தீர்த்தவாரியும்  நடைபெறுகிறது.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் – ஆவூர் – மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன. தொடர்புக்கு : 04374 – 273502 , 273423.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com