திருவள்ளூர்:
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா தொடங்கியது.
நாளை மாலை 6 மணிக்கு மலைக்கோவில் அடி வாரத்தில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்பத் திருவிழா நடக்கிறது.
இதில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், மலைப்படிகள் வழியாக, சரவண பொய்கை திருக்குளத்திற்கு வந்து மூன்று முறை குளத்தை சுற்றி வலம் வருவார். பின், உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்ற பின், மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும்.
ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா நாளை மறுநாள், இரண்டாம் நாள் தெப்பத்திருவிழா 28-ந்தேதி மூன்றாம் நாள் தெப்பத் திருவிழா நடக்கிறது.
இதில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி மற்றும் இசைக் குழுவினரின் பக்தி இன்னிசையும் நடைபெறுகிறது.
ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி மற்றும் மொட்டை அடித்து, அலகு குத்தி வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மூன்று மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மலைக்கோவில் பகுதி மற்றும் திருத்தணி நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.