நேற்று சிரவண பவுர்ணமியையொட்டியும், அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் 5-வது நாள் நடக்கும் கருட சேவை உற்சவத்தை முன்னிட்டும் நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருட சேவை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். வாகன வீதிஉலாவுக்கு முன்னால் பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது