திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா 10-ந்தேதி தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) முதல் 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடக்கிறது.

9 நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவில் உற்சவரான மலையப்பசாமி காலை, இரவு என இருவேளைகளில் திருமலையில் உள்ள 4 மாடவீதிகளில் உலா வருகிறார். விழா நடைபெறும் நாட்களில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி முதல் 8 மணிவரை அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 10-ந்தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும். இரவு 8 மணி முதல் 10 மணிவரை பெரிய சேஷ வாகனத்தில் உற்சவரான மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

11-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை ஹம்ச வாகனத்திலும், 12-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை சிம்ம வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை முத்துப்பந்தல் வாகனத்திலும் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா வருகிறார்.

தொடர்ந்து 13-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை கல்பவிருட்ச வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், 14-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணிவரை பல்லக்கு வாகனத்திலும் மோகினி அலங்காரத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை இரவு 7 மணி முதல் 12 மணிவரை நடக்கிறது. இதில் கருட வாகனத்திலும் மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

15-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவரான மலையப்பசாமி அனுமந்த வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை கஜவாகனத்திலும், 16-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணிவரை சூரியபிரபை வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பசாமி மாடவீதியில் வீதிஉலா நடக்கிறது.

7-ந்தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்க தேரோட்டம் நடக்கிறது. இரவு 8 மணி முதல் 10 மணிவரை குதிரை வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா வருகிறார்.

18-ந்தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கரஸ்நானம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com