இதனைத்தொடர்ந்து ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கோவிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்தபடி வந்து கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
பின்னர் அவர் கோவிலில் அவரது எடைக்கு எடை அரிசி துலாபாரம் வழங்கினார். இது 80 கிலோ 40 கிராம் இருந்ததாக தெரிவித்தனர் இதனை தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்தார்.
இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நிர்வாகிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று காலையில் சின்ன சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. மாடவீதிகளில் சாமி வீதி உலாவின் போது கலைக்குழுவினர் மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று இரவு அம்ச வாகனம் வீதி உலா நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவை யொட்டி திருப்பதியில் மின் அலங்காரம், மலர் அலங்காரம் செய்யப் பட்டுள்ளது. சாமி வீதி உலா பக்தர்கள் காண 19 இடங்களில் எல்.இ.டி. பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனம் உட்பட அனைத்து தரிசன கவுண்டர்களும் நிரம்பி வழிகின்றன. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது.
சாமி தரிசனத்துக்கு 16 மணிநேரம் ஆகிறது. நேற்று மாலை முதல் இன்று காலை வரை 65 ஆயிரத்து 28 பேர் சாமி தரிசனம் செய்தனர். 30 ஆயிரத்து 498 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி வேண்டுதல் நிறைவேற்றினர். ரூ.2 கோடியே 66 லட்சம் உண்டியல் வசூலானது.
பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் குடிநீர், காபி, டீ, பால், மோர் உள்ளிட்டவை வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
விழாவையொட்டி 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 1500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.