திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ஸ்ரீரங்க விமானம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விமானம் பிரம்மதேவனின் தவநலத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும். அதனை பிரம்ம தேவர் தேவலோகத்தில் நெடுங்காலம் பூஜித்து வந்தார். ஸ்ரீரெங்கநாதருக்கு நித்திய பூஜைகள் புரிந்து வரும்படி பிரம்மதேவர் சூரியனை நியமித்தார். பின்னர் ஸ்ரீராமபிரானின் முன்னோரான சூரிய குலத்தில் தோன்றிய இட்சுவாகு என்ற அரசன் இவ்விமானத்தை தனது தலைநகராகிய அயோத்திக்கு வழிபட எடுத்துக்கொண்டு வந்தான்.

திருமாலின் அவதாரமாக தோன்றிய ஸ்ரீராமபிரான் இலங்கை வேந்தன் ராவணனை அழித்து பட்டாபிஷேகம் நடத்தப்பெற்ற கால கட்டத்தில் ராவணனின் சகோதரன் விபீஷணனுக்கு அன்பு பரிசாக இந்த விமானத்தை அளித்தார். விபீஷணன் பக்தி பெருக்கோடு தனது தலையின் மேல் விமானத்தை வைத்து சுமந்து கொண்டு இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் பெருக்கெடுத்து ஓடிய காவிரி கரையில் களைப்பின் மிகுதியால் கீழே இறக்கி வைத்து விட்டு காவிரியில் புனித நீராடிவிட்டு மீண்டும் இலங்கைக்கு புறப்பட நினைத்து விமானத்தை கையால் எடுப்பதற்கு எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

பெயர்த்து எடுக்க முயன்றும் முடியாமல் போகவே அந்த விமானம் அங்கேயே நிலைகொண்டு விட்டது. ராம பிரான் வழங்கிய விமானத்தை தனது நாட்டுக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என எண்ணி கதறி அழுதான் விபீஷணன். ஆனாலும் விமானத்தை நகர்த்த முடியவில்லை. அந்த விமானம் அப்படி அன்று நிலைகொண்ட இடமே ஸ்ரீரங்கமாகும்.

அந்த கால கட்டத்தில் திருச்சி பகுதியை ஆண்டு வந்த சோழமன்னன் தர்மவர்மன் விபீஷணனுக்கு ஆறுதல் கூறி ரெங்கநாதர் காவிரி கரையிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் என்பதையே இந்நிகழ்வு எடுத்து காட்டுகிறது என அவனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். விபீஷணனை தேற்றும் பொருட்டு தென் திசையான இலங்கையை நோக்கி ரெங்கநாதர் பள்ளி கொண்டருள்வதாக வாக்குறுதி அளித்தான். பின்னர் சோழமன்னன் தர்மவர்மன் அந்தவிமானத்தினை சுற்றி கோவில் எழுப்பி வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தான். இதுவே ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தோன்றிய வரலாறாகும்.

எனினும் ஸ்ரீரங்கம் கோவில் கருவறையானது வரலாறு தோன்றாத காலத்திற்கும் மிக மிக முற்பட்டதாக கருதப்படுகிறது. இந்திய சமய வரலாற்றில் ஸ்ரீரங்கம் கோவிலானது மிகவும் முதன்மையான சிறப்பிடத்தை பெற்றிருக்கின்றது. கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ம் நூற்றாண்டு வரையில் தென்னிந்தியாவில் மிகவும் சிறப்புற்று விளங்கி வைணவ சமயத்தின் மிகப்பெரிய தலைமை செயலகமாக புண்ணிய பூமியாம் ஸ்ரீரங்கம் திகழ்ந்திருக்கிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்தவரை ஆண்டுக்கு 365 நாட்களும் திருவிழா நாட்கள் தான் என்று கூறும் அளவிற்கு இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் எடுத்துக்கூறுவது என்பது இயலாத காரியமாகும். இதில் பண்பாடு, பழமை மாறாமல் நடத்தப்பட்டு வரும் விழாக்கள் மொத்தம் 322 என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இவை எல்லாவற்றிலும் சிறப்பானது 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவாகும். வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பின் போது பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவிப்பயனை அடையலாம்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com