திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 18-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

ஆண்டுக்கு 25 ஏகாதசிகள் வருகின்றன. ஒரு மாதத்திற்கு 2 ஏகாதசிகள். ஆனால் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மங்கள நாளாக கருதப்படுகிறது. ஸ்ரீஆண்டாள் மார்கழி மாதம் 30 நாளும் பெருமாளையே நினைத்து நோன்பு இருந்து, அவரையே மணப்பேன் என்று தான் சூடி பிறகு ஆண்டவனுக்கு பூமாலை சூட்டி திருமணம் செய்து கொண்டார். இதுவே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் சாமியின் திருநாமத்தை சொல்லிக்கொண்டு விழித்திருந்து மறுநாள் துவாதசி அன்று விடியற்காலை குளித்து பகவானை தரிசனம் செய்து, வீட்டில் படையல் கொடுத்துவிட்டு விரதத்தை முடிப்பது தான் வைகுண்ட ஏகாதசி விரதமாகும். இவ்வாறு வைகுண்ட ஏகாதசி அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து மகா விஷ்ணுவின் நாமத்தை துதிக்கும் பக்தர்களுக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், குழந்தை செல்வம், நோயற்ற வாழ்வு ஆகியவற்றை அளிப்பதோடு வைகுண்ட வாசம் (சொர்க்கம்) வழங்குவதாகவும், புராணங்களில் கூறப்படுகிறது.

காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 107-வது திவ்ய தேசமாக அழைக்கப்படுகிறது. இங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தால் சித்ரகுப்தன் எழுதி வைத்த நம்முடைய பாவங்கள் விமோசனம் ஆகிறது என்பது ஐதீகம்.

திருப்பாற்கடலில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிவலிங்கத்தின் மீது நின்ற கோலத்தில் வெங்டேச பெருமாள் காட்சி தருவது விசேஷமாகும். அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் கோவிலாக இக்கோவில் அமைந்துள்ளது. அதோடு வைணவத்தையும், சைவத்தையும் ஒன்றிணைக்கும் திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

இந்த கோவிலில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதையொட்டி அதிகாலை 3 மணிக்கு பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் இதர மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 3.30 மணிக்கு ஆஞ்சநேயர் மூலவர், உற்சவர் சாமிகளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் ஆற்காடு, காவேரிப்பாக்கம், சோளிங்கர், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தக்கார் பரந்தாமகண்ணன், செயல் அலுவலர் திருஞானம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com