திருமண தடை நீக்கும் பகவதி அம்மன்

கன்னியாகுமரியில் கன்னி தெய்வமாக வீற்றிருக்கும் அன்னை பகவதி அம்மன் மிகவும் சக்திவாய்ந்த கடவுளாக நம்பப்படுகிறார். இங்கு வீற்றிருக்கும் அம்மன் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அம்மனை வேண்டினால் நினைத்த நல்ல காரியங்கள் ஈடேறும், நோய், நொடிகள் நீங்கும், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் பூஜைகளில் திரளாகப் பங்கேற்கிறார்கள்.
தேவி கன்னி தெய்வமாக இருப்பதால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள்.

சுயம்வர அர்ச்சனை

திருமணம் ஆகாத பெண்கள், விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கோவிலில் சுயம்வர அர்ச்சனை நடத்தப்படுகிறது. கோவில் அலுவலகத்தில் பணம் செலுத்தி விட்டு இந்த சுயம்வர அர்ச்சனையை தொடங்க வேண்டும். தொடர்ந்து 11 வாரங்கள் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு இந்த அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் திருமணம் விரைவில் கைகூடும் என்கிறார்கள். தமிழகம், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து இந்த சுயம்வர அர்ச்சனையை செய்து பலன் பெறுகிறார்கள்.

கன்னிகா போஜனம்

பெண்கள் தோஷம் நீங்க கன்னிகா போஜனம் என்ற பூஜையும் நடத்தப்படும். கோவிலின் தெற்கு பக்கம் உள்ள மண்டபத்தில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பூஜை நடைபெறும். 11 சிறுமிகளை வரவழைத்து இந்த பூஜையை நடத்துவார்கள். அவ்வாறு பூஜையில் பங்கேற்கும் சிறுமிகளுக்கு, தோஷம் நீங்க பூஜை நடத்துபவர்கள் பாவாடை, தாவணி, பூ, வளையல் மற்றும் வெற்றிலை, பாக்குடன், தட்சணையும் சேர்த்துக் கொடுப்பார்கள். இவ்வாறு பூஜை செய்யும் போது அந்த தோஷம் நீங்கும் என்கிறார்கள்.

பட்டு சாத்துதல்

அம்மனை வேண்டி பலன் பெறும் பக்தர்கள், அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை மூலம் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகிறார்கள். மேலும் வழக்கமான அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகளிலும் தங்கள் பங்களிப்பை காணிக்கையாக அளிக்கிறார்கள்.

துலாபார நேர்ச்சை

பகவதி அம்மன் கோவிலில் கேரள முறைப்படி பூஜைகள் நடைபெறுவதால் இங்கு துலாபார நேர்ச்சை வழிபாடும் இடம்பெற்று உள்ளது. இதற்காக இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் பெரிய தராசு தொங்கவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்ற இந்த துலாபாரத்தின் ஒரு பகுதியில் அமர்ந்துகொள்ள மற்றொரு பகுதியில் பக்தர்களின் எடைக்கு எடையாக வாழை பழம், சீனி போன்றவை துலாபார நேர்ச்சையாக வழங்குகிறார்கள். ஏராளமான பக்தர்கள் துலாபார நேர்ச்சை செலுத்த தினசரி இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com