திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும்.

திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம், நேற்று மாலை ஏற்றப்பட்டது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மாலை 5.30 மணிக்கு மேல் சாமி சன்னதியில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் என ஒருவர் பின் ஒருவராக ஆடியபடியே வந்து தீப மண்டபத்தில் தங்க விமானங்களில் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை காண பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். மலை உச்சியில் ராட்சத கொப்பரையில் நெய் ஊற்றி திரிவைத்து மகாதீபம் ஏற்றுவதற்கு தயாராக இருந்தனர். மாலை 5.55 மணியளவில் சாமி சன்னதியில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சியளித்து சென்றதும் சாமி சன்னதி முன்பு உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் மலை உச்சியிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது. உடனே கோவிலில் இருந்த பக்தர்கள், கிரிவலம் சென்ற பக்தர்கள், மகாதீபத்தை காண வீடுகளின் மாடியில் காத்திருந்த பக்தர்கள் மலையை நோக்கி ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்ற பக்தி கோ‌ஷத்துடன் மகாதீபத்தை வணங்கினர். கிரிவலம் சென்ற பக்தர்கள் அங்கேயே கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். வீடுகளில் இருந்த பக்தர்கள் தங்கள் வீட்டு மாடியில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கினர்.

மகாதீபம் ஏற்றப்பட்டதும் திருவண்ணாமலை நகரம் முழுவதும் பட்டாசுகள், வாண வெடிகள் வெடிக்கப்பட்டன. பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அகல் விளக்கு ஏற்றினர். அனைத்து வீடுகளின் முன்பும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டதால் திருவண்ணாமலை நகரம் ஒளிவெள்ளமாக காட்சியளித்தது.


மகா தீபம் ஏற்றப்பட்டதும் இரவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த காட்சி.

மகாதீபம் ஏற்றிய பிறகே திருவண்ணாமலை மற்றும் நகரை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், வியாபார நிறுவனங்களிலும் மின்விளக்குகளை எரியச் செய்தனர்.

2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும்.

கார்த்திகை தீபத்தின்போது கூட்ட நெரிசல் காரணமாக திருவண்ணாமலைக்கு வர முடியாதவர்கள் இந்த 11 நாட்களில் வந்து மகாதீபத்தை தரிசனம் செய்து கொள்ளலாம்.

டிசம்பர் 4-ந்தேதி காலை வரை மகா தீபம் காட்சியளிக்கும். அதன் பிறகே அன்றே மகா தீப கொப்பரையும் மலையில் இருந்து கீழே இறக்கி கொண்டு வரப்படும்.

மகாதீபம் ஏற்றிய பின் இரவில் தங்க ரி‌ஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்தனர்.

மகா தீபத்தை தொடர்ந்து அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. அதன்படி இன்று இரவு சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், 26-ந் தேதி (திங்கட்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைகிறது.

நாளை அதிகாலை உண்ணா முலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்தருகின்றனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com