திருவண்ணாமலை அஷ்டலிங்க வழிபாடுகள்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை பூஜித்து வந்தால் இறைவனின் அருள் பெற்று வாழ்வில் மன நிம்மதியையும், சகல சவுகரியங்களையும் பெற முடியும்.
இந்திரலிங்கம் :

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்டலிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை பூஜித்து வந்தால் இறைவனின் அருள் பெற்று வாழ்வில் மன நிம்மதியையும், சகல சவுகரியங்களையும் பெற முடியும். கிரிவல பாதையை சுற்றி வரும்போது முதலில் இந்திரலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் தேவர்களின் தலைவன் இந்திரனால் வணங்கப்பட்டது. இந்திர லிங்கத்தை வழிபடுவதால் வீண் பழி வராது. அடிக்கடி தவறுகள் நடக்காமல் இருக்கும். இந்த லிங்கத்தை மனதார வணங்குவோருக்கு மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும். இக்கோவிலுக்கு அருகே இந்திர தீர்த்தம் உள்ளது.

அக்னி லிங்கம் :

கிரிவல பாதையில் 2-வதாக அமைந்திருப்பது அக்னி லிங்க தலமாகும். பல யுகங்களாக திருவண்ணாமலையை அங்கபிரதட்சனம் செய்து வந்த மூன்று ருத்ர மூர்த்திகளின் திருமேனிகளும், ஒரு இடத்தில் வரும்போது குளுமை பெற்றனர். அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சுயம்புலிங்கமாக சிவபெருமான் காட்சியளித்தார். இந்த இடமே அக்னிலிங்க தலமாக விளங்கி வருகிறது. அக்னி லிங்கத்தை வழிபடுபவர்கள் கற்பு, சத்தியம், தர்மம் ஆகியவற்றில் சிறந்து விளங்கி வளமான வாழ்வை பெற இறைவன் அருள் புரிவார்.

எமலிங்கம்
:

கிரிவல பாதையில் 3-வதாக இருப்பது எமலிங்க தலமாகும். முற்காலத்தில் எமதர்மன் அண்ணாமலையாரை வணங்கி அவரது அருள் பெறுவதற்காக திருவண்ணாமலையை அங்க பிரதட்சணம் செய்தார். அப்போது அவரது பாதம் பட்ட இடமெல்லாம் தாமரை பூக்கள் மலர்ந்தது. அந்த இடத்திலேயே இறைவன் ஜோதிமயமாய் லிங்க வடிவில் தோன்றி அருள் புரிந்தார். இதுவே எமலிங்கத்தின் வரலாறாகும். எமலிங்கத்தை வழிபட்டால் எமபயம் இன்றி நிம்மதியான வாழ்க்கையை பெறலாம். நீதி தவறாமல் நடக்கலாம்.

நிருதி லிங்கம் :

கிரிவல பாதையில் 4-வதாக அமைந்திருப்பது நிருதி லிங்க தலமாகும். நிருதீஸ்வரர் பல யுகங்களாக அண்ணாமலையாரின் அருள் வேண்டி வணங்கி வந்தார். அவர் கிரிவலமும் சுற்றி வந்தார். ஒருநாள் நிருதீஸ்வரர் கிரிவலம் வந்தபோது தென்மேற்கு திசையில் ஒரு குழந்தையின் சத்தமும், சலங்கை ஒலியின் சத்தமும் கேட்டது. இதைத் தொடர்ந்து சத்தம் வந்த இடத்தை நிருதீஸ்வரர் தேடி சென்றார். அந்த இடத்திலிருந்து அருணகிரியை வணங்கினார். அப்போது அவர் எதிரே பிரதிரூபலிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தை நிருதீஸ்வரர் வணங்கி வழிபட்டார். இதுவே நிருதிலிங்கமாகும். நிருதீஸ்வரர் லிங்கத்தை பூஜித்து அனாதை குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி ஆகியவை அளித்தல் குழந்தை இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும்.

வருண லிங்கம் :

இது வருண பகவான் வழிபட்டதால் உருவான லிங்கமாகும். கிரிவல பாதையில் 5-வதாக அமைந்திருப்பது வருணலிங்க தலமாகும். அண்ணாமலையாரின் அருளை பெறுவதற்காக வருண பகவான் தனது கால் முட்டியால் மலையை பிரதட்சணம் செய்தார். ஒற்றை காலால் தத்தியவாறு கிரிவலம் வந்தார். அப்போது சூரியலிங்கத்தின் அருகே மிகப்பெரிய நீருற்று காணப்பட்டது. புண்ணியம் தரும் அந்த நீரை தனது உடலில் தெளித்துக் கொண்ட வருணபகவான் அண்ணாமலையாரை வணங்கினார். அப்போது அவரின் அருகில் ஒளிமயமான அழகிய லிங்கம் ஒன்று தோன்றியது. இதுவே வருணலிங்கமாக வழிபடப்பட்டு வருகிறது. வருணலிங்கத்தை வழிபடுவோருக்கு தண்ணீரால் ஏற்படும் தோஷங்கள் விலகும். சிறுநீரக வியாதிகள், சர்க்கரை மற்றும் நீர் சம்பந்தப்பட்ட நோய்களும் இந்த லிங்கத்தை பூஜிப்பவருக்கு நீங்கி விடும்.

வாயு லிங்கம்
:

திருவண்ணாமலை கிரிவல பாதையில் 6-வதாக அமைந்திருப்பது வாயுலிங்க தலமாகும். வாயு பகவான் கழுகுமலையில் சுவாசத்தை நிலை நிறுத்தி கிரிவலம் வந்தபோது அடி அண்ணாமலை அருகே மிகவுத் சுகந்தமான நறுமணம் வீசுவதை கண்டார். அந்த இடத்திற்கு சென்றபோது பஞ்சகிருத்திகா பூக்களின் நடுவில் சுயம்பு லிங்கமாய் சிவபெருமான் தோன்றி அருள்புரிந்தார். அவரை வாயு பகவான் வழிபட்டு பூஜைகள் நடத்தினார். இதுவே வாயு லிங்கத்தின் வரலாறாகும். வாயு லிங்கத்தை தரிசிப்பவருக்கு சுவாசம் இருதய நோய் போன்றவை அண்டாது.

குபேர லிங்கம் :

குபேர பகவான் தியானத்தில் ஆழ்ந்த நிலையில் இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பிய வண்ணம் குதிகால் நடையுடன் திருவண்ணாமலையை வலம் வந்தார். பல யுகங்களாக கிரிவலம் வந்தபின் அவருக்கு அருணாசலேஸ்வரர் காட்சி அளித்து அருள் புரிந்ததார். அந்த இடத்தில் தோன்றிய லிங்கத்தை குபேரன் வழிபட்டார். இது குபேர லிங்கமாகும். குபேர லிங்கத்தை வழிபடுவோருக்கு செல்வம் கொழிக்கும். மேலும் முறையற்ற வழிகளில் பணத்தை சம்பாதித்தவர்களுக்கு பாவங்கள் நீங்கும்.

ஈசான்ய லிங்கம் :

திருவண்ணாமலை கிரிவல பாதையில் 8-வதாக அமைந்திருப்பது ஈசான்ய லிங்க தலமாகும். பினுகியருத்திரர் என்ற தேவர் கண்களை மூடியவாறு பல யுகங்களாக திருவண்ணா மலையை வலம் வந்தார். அப்படி ஒருநாள் அவர் கிரிவலம் வந்தபோது ஓர் இடத்தில் யாரோ ஒருவர் குலுங்கி குலுங்கி ஆடும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார். அங்கு அதிகார நந்தீஸ்வரர் அருணா சலேஸ்வரரை வலம் வந்து ஆனந்த கூத்தாடும் காட்சியைக் கண்டார். இந்த இடத்தின் அருகே அவுஷத தீர்த்தீஸ்வரராக லிங்க வடிவில் சிவபெருமான் தோன்றினார். இதுவே ஈசான்ய லிங்கமாகும். இத்தலத்தை பினுகியருத்திரர் பூஜித்து வழிபட்டு வந்தார்.

ஈசான்ய லிங்கத்தை வழிபடுவதால் ஏழரை நாட்டு சனீஸ்வரரின் தொல்லைகளில் இருந்து விடுபட முடியும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com