திருவண்ணாமலை: ஆற்றல் தரும் அக்னிலிங்கம்

திருவண்ணாமலை: ஆற்றல் தரும் அக்னிலிங்கம்

திருவண்ணாமலை கோவிலில் திரும்பிய திசை எல்லாம் லிங்கங்களை பார்க்கலாம். இந்த ஆலயத்தில் மொத்தம் 56 லிங்கங்கள் உள்ளன. இதில் 11 லிங்கங்கள் தனி சன்னதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு வரலாறு இருக்கிறது.

அந்த வரலாற்றை தெரிந்து கொள்வது என்பது மிக கடினமானது. முக்கிய லிங்கங்கள் பற்றி மட்டும் இப்போதும் செவி வழி செய்தியாக தகவல்கள் உள்ளன.

இந்த லிங்கங்கள் ஆலயத்தின் எந்தெந்த பகுதிகளில் உள்ளன என்பதை தெரிந்து கொண்டால் வழிபாடு செய்வதற்கு மிக எளிதாக இருக்கும்.

ராஜகோபுரத்தை கடந்ததும் வரும் 5-ம் பிரகாரத்தில் பாதாள லிங்கேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற 2 லிங்கங்கள் இருப்பதை பார்க்கலாம். அடுத்து 4-ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் எதிரே பிரம்ம லிங்கம், ஸ்ரீநளேஸ்வரர், வித்யாதேஸ்வரர் ஆகிய 3 லிங்கங்கள் உள்ளன.

3-ம் பிரகாரத்தில் மகிழ மரத்தடியில் ஜலகண்டேஸ்வரர், கல்யாண மண்டபத்தில் பீமேஸ்வரர், அருணகிரி யோகீஸ்வரர், ஸ்ரீகாளத்தீஸ்வரர், சிதம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தனித்தனி சன்னதிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிரகாரத்தில் அமைந்துள்ள லிங்கங்கள் பஞ்ச பூதங்களை பிரதிபலிப்பதை காணலாம். இதன் மூலம் திருவண்ணாமலை தலத்தில் பஞ்ச பூதங்களும் அடங்கி இருப்பதை நமது முன்னோர்கள் உணர்த்தி உள்ளனர்.

2-ம் பிரகாரத்தில் அடுத்தடுத்து லிங்கங்கள் அணிவகுத்து இருக்கின்றன. இந்திர லிங்கம், சனகேஸ்வரர், சனந்தனேசுவரர், சனாதனேஸ்வரர், சனதீகுமாரேஸ்வரர், கவுசிகேசுவரர், குத்ஸரிஷி ஈஸ்வரர், வால்மீகிசுவரர், அக்னி லிங்கம், விக்னேசுவரர், விஸ்வநாத ஈஸ்வரர், ஸ்ரீநாரதேசுவரர், ஸ்ரீகாசி லிங்கம், ஸ்ரீகாசி லிங்கம், வைசம் பாயனேசுவரர், ஸ்ரீவாமரீஷிசுவரர், எம லிங்கம், காசி லிங்கம், காசிலிங்கம், காசி லிங்கம், காசி லிங்கம், ஸ்ரீதும்புரேஸ்வரர், ஸ்ரீநிருதலிங்கம், ஸ்ரீ வருணலிங்கம், வியாசலிங்கம், ஸ்ரீவிக்ர பாண்டீ சுவரர், ஸ்ரீவணிஷ் டலிங்கம், ஸ்ரீசகஸ்ரலிங்கம், ஸ்ரீவாயுலிங்கம், ஸ்ரீகுபேர லிங்கம், விசுவாமித்ஸ்வரர், ஸ்ரீபதஞ்சலீசுவரர், ஸ்ரீவியாக்கிரபாதேசுவரர், 108 லிங்கம், ஸ்ரீஅகஸ்தீசுவரர், ஸ்ரீஜீரஹரேசுவரர், ஈசானலிங்கம் என 37 லிங்கங்கள் இந்த பிரகாரத்தில் உள்ளன.

Image result for thiruvannamalai lingam images

இந்த 37 லிங்கங்களும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் கொண்டவை. எனவே இந்த லிங்கங்களை மிக பொறுமையாக வழிபாடு செய்தால் பல உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். மிக உன்னிப்பாக கவனித்தால் கிரிவலப்பாதையில் நாம் வழிபடும் அஷ்டலிங்கங்களும் இங்கு இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஒரே கல்லில் 1008 லிங்கம் இருப்பதை பார்க்கலாம். இந்த லிங்கங்களில் பெரும்பாலானவை ரிஷிகளால் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து கருவறையில் இருக்கும் மூலவரான அண்ணா மலையார் லிங்கத்தை பார்க்கலாம். 5-ம் பிரகாரத்தில் இருந்து ஒவ்வொரு லிங்கமாக நாம் கணக்கிட்டு வந்தால் மிகச்சரியாக 50-வது லிங்கமாக கருவறை லிங்கம் திகழ்கிறது. இந்த லிங்கத்திற்கு அக்னி லிங்கம் என்று பெயர். சிவப்பெருமான் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வடிவமாக திகழ்கிறார். அதை உணர்த்தவே காஞ்சீபுரத்தில் மண்லிங்கம், திருவானைகாவலில் நீர் லிங்கம், ஸ்ரீகாளகஸ்தீயில் வாயு லிங்கம், சிதம்பரத்தில் ஆகாய லிங்கம் இருக்கின்றன. அதேபோன்று திருவண்ணாமலையில் அக்னி லிங்கம் திகழ்கிறது.

முன் ஒரு காலத்தில் சிவபெருமானை நோக்கி பார்வதி தேவி கடும் தவம் இருந்தாள். அவளுக்கு காட்சி கொடுப்பதற்காக சிவபெருமான் அக்னி வடிவம் எடுத்து வந்தார். பார்வதியும் பரமசிவனும் ஒன்று சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் ஆக மாறி அக்னி மண்டலத்தின் நடுவில் நடனம் புரிந்தனர். பிறகு சிவலிங்கமாக மாறினார்கள். அந்த லிங்கம்தான் அக்னி லிங்கமாக போற்றப்படுகிறது.

அக்னி லிங்கம் மிகுந்த ஆற்றல் உடையது. நாம் கேட்கும் அனைத்து வரங்களையும் தரும் சிறப்புடையது. திருவண்ணாமலை தலத்திற்கு செல்பவர்கள் அக்னி லிங்கமாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற முடியும். அக்னி லிங்கத்தை வழிபடும்போது நமது மனம் இலவம்பஞ்சு போல லேசாகி விடும். நம் மன பாரத்தை எல்லாம் அக்னி லிங்கமாக இருக்கும் அண்ணாமலையார் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று தோன்றும். சுருக்கமாக சொல்வது என்றால் நம் மனது நிர்விகல்பம் ஆகி விடும். அக்னி லிங்கத்திடம் நம் மனதை ஆத்மார்த்தமாக செலுத்தினால் மட்டுமே இந்த நிலையை நாம் பெற முடியும்.

இத்தகைய சிறப்புடைய அக்னி லிங்கத்தை வழிபட்ட பிறகு வெளியில் வந்து முதல் பிரகாரத்தை சுற்றி வரலாம். அங்கு லிங்கோத்பவர் உள்ளார். அடுத்து உண்ணாமலையம்மன் சன்னதியிலும் லிங் கங்கள் உள்ளன. அங்குள்ள அஷ்ட லட்சுமி மண்டபத்தில் சோழலிங்கம், சேரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் நிறுவி வழிபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த லிங்கங்கள் தவிர அடிமுடி அறியாதவர், லிங்கம், ஸ்ரீசோமேசுவரர் உள்ளனர்.

இவ்வளவு லிங்கங்கள் இருந்தாலும் தனி சன்னதிகளில் உள்ள லிங்கங்களுக்கு வெவ்வேறு சிறப்புகள் உள்ளன. 5-ம் பிரகாரத்தில் உள்ள பாதாளலிங்கம் ரமணர் காலத்தில் புகழ்பெற்றது. இந்த பாதாள லிங்கம் ஆயிரம்கால் மண்டபத்தில் ஒரு பகுதியில் பாதாளத்தில் அமைந்துள்ளது. ரமணர் சிறுவயதில் திருவண்ணாமலைக்கு வந்த போது குகை போன்று இருந்த இந்த பாதாளத்திற்குள் சென்று தவம் இருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரமணரை கண்டுபிடித்து வெளியில் அழைத்து வந்தனர். அதன் பிறகு இந்த பாதாள லிங்கத்திற்கு சிறப்பான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த லிங்கம் இருக்கும் சன்னதியில் அமர்ந்து தியானம் செய்தால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இந்த பிரகாரத்திலேயே கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி உள்ளது. அங்கு கிழக்கு திசையை நோக்கி ஈஸ்வரர் அமர்ந்து உள்ளார். அவரை சாட்சியாக வைத்து அந்த சன்னதியில் திருமணம் நடத்தப்படுகிறது. சிவராத்திரி தினத்தன்று இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

நான்காம் பிரகாரத்தில் நளேஸ்வரர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியின் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. சேதி நாட்டு இளவரசி தமயந்தி நிடத நாட்டு மன்னன் நளன் என்பவனை திருமணம் செய்ய முடிவு செய்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனி பகவானை தூண்டி விட்டு நளனை துன்புறுத்த செய்தனர். உடனே நளன் சிவபெருமானை வேண்டி வணங்கி தனது துன்பத்தில் இருந்து விடுபட்டார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நளன் இத்தலத்துக்கு வந்து இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் இந்த லிங்கம் நளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. நளேஸ்வரரை வழிபட்டால் களத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

இந்த சன்னதி அருகிலேயே வித்யாதேஸ்வரர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் கல்வியில் சிறப்புகளை பெறலாம் என்பது ஐதீகமாகும். அடுத்து அதே வரிசையில் பிரம்மலிங்கம் தனி சன்னதியில் இருப்பதை காணலாம். பிரம்மா இத்தலத்தில் அண்ணாமலையாரை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரம்மா எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டு இருப்பார்.

இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கத்திலும் நான்கு முகங்கள் உள்ளன. அக்னி, வாயு, மண், தண்ணீர் ஆகியவற்றை குறிப்பதால் இந்த நான்கு முக லிங்கத்தை சதுர்முக லிங்கம் என்று சொல்கிறார்கள். உச்சியில் ஐந்தாவது முகமும் இருப்பதாக கருதப்படுகிறது. அந்த முகத்துக்கு ஆகாசம் என்று பெயர். இதனால் இந்த லிங்கம் பஞ்சமுக லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதே பிரகாரத்தில் அடிமுடி காணா அண்ணாமலையார் சன்னதி உள்ளது. அண்ணாமலையார் பாதம் அருகே அமைந்துள்ள இந்த சன்னதியில் சிவபெருமானும் பார்வதியும் சேர்ந்து காட்சி அளிக்கிறார்கள். திருவண்ணாமலை தலத்தில் இந்த சன்னதி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அடுத்து மூன்றாம் பிரகாரத்தில் தல விருட்சமான மகிழம் மரம் அருகே கல்யாண மண்டபத்திற்குள் பீமேஸ்வரர் சன்னதி உள்ளது.

பஞ்ச பாண்டவர்கள் மகாபாரதபோரில் வெற்றி பெறுவதற்காக ஒன்றாகவும் தனித்தனியாகவும் பல்வேறு தலங்களுக்கு சென்று வழிபட்டனர். அந்த வகையில் பீமன் திருவண்ணாமலை தலத்துக்கு வந்து அண்ணாமலையாரை வழிபட்டு பலன் பெற்றார். அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த சன்னதி அமைந்துள்ளது. சிலர் இந்த சன்னதி அமைந்துள்ள இடத்தில் தான் அண்ணாமலையாரை பீமன் நேரில் கண்டு தரிசித்ததாக சொல்கிறார்கள்.

இந்த சன்னதியை கடந்துசென்றால் மேற்கு பகுதியில் அருணகிரி யோகீஸ்வரர் மண்டபத்தை காணலாம். நான்கு துண்களுடன் அமைந்துள்ள இந்த சன்னதியில் அருணகிரி நாதர் சிலை அமைந்துள்ளது. ஆனால் உண்மையில் அண்ணாமலையார் அங்கு யோகியாக வீற்றிருப்பதாக சான்றோர்கள் கணித்துள்ளனர். இதனால் இந்த மண்டபம் அருணகிரி யோகீஸ்வரர் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

சித்தர்கள் இந்த இடத்தில் தியானம் செய்து பலன் பெற்றுள்ளனர். எனவே இந்த மண்டபம் பகுதியில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.  இதே மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அகத்தீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சிதம் பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர் ஆகிய சன்னதி கள் சிவபெருமான் பஞ்சபூதங்களாக இத்தலத்தில் இருப்பதை பிரதிபலிக்கின்றன.

இரண்டாம் பிரகாரத்தில் 37 லிங்கங்கள் அணிவகுக்கின்றன. அந்த லிங்கங்களின் பெயரிலேயே அவற்றின் வரலாறு உள்ளது. நேரம் இருப்பவர்கள் இந்த லிங்கங்களின் வரலாறை தெரிந்து கொண்டு வழிபட்டால் அந்த வழிபாடு முழுமையானதாக இருக்கும்.  திருவண்ணாமலை தலத்தில் மற்ற இறை சன்னதிகள் போல நந்திக்கும் பல்வேறு சன்னதிகள் உள்ளன. அந்த சன்னதிகளிலும் ரகசியங்கள் மறைந்துள்ளன.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com