திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணியளவில் கோவிலில் இருந்து அர்ச்சகர்கள் காவிரி கரைக்கு சென்று வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து, அதை கோவில் யானை அகிலா மீது வைத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். அந்த புனிதநீரால் ஜம்புகேசுவரர், அகிலாண்டேஸ்வரிக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நடராஜர் உள்வீதிகளில் உலா வருகிறார். அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதுபோல் ஆனி திருமஞ்சனத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை மண்டபத்தில் நேற்று இரவு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் முடிந்ததும் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று காலை சாமி புறப்பாடு நடைபெற உள்ளது.
இதுபோல், தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் ஆனித்திருமஞ்சன திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.