திரு அம்பர் மாகாளம்

இறைவர் திருப்பெயர்: காளகண்டேசுவரர், மாகாளேச்வரர்
இறைவியார் திருப்பெயர்: பட்சநாயகி
தல மரம்: கருங்காலி
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
வழிபட்டோர்: சம்பந்தர்,காளி, மாகாள இருடியர்

தல வரலாறு

      • இத்தலம் மக்கள் வழக்கில் “கோயில் திருமாளம்” என்று வழங்குகின்றது. அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ள தலம். 
      • அம்பன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்களை கொன்ற பாவம் நீங்க மாகாளி பூசித்தது; ஆதலின் இஃது “மாகாளம்” எனப்பட்டது. 
      • சோமாசி மாற நாயனார் யாகம் செய்த பதி.

         

      • சோமாசி மாற நாயனார், நாள்தோறும் சுந்தரருக்கு அவர் திருவாரூரில் இருந்தபோது உணவுக்குத் தூதுவளை கீரை கொண்டுவந்து தரும் தொண்டைச் செய்து வந்தார். சுந்தரரின் துணைவியாரான பரவையாரும் அதை நன்கு சமைத்துப் பரிமாற, சுந்தரர் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். ஒரு நாள் சுந்தரர் “நாள்தோறும் இக்கீரை கொணர்ந்து தருபவர் யார்?” என்று கேட்டு, சோமாசிமாறரைப் பற்றியறிந்து நேரில் கண்டு, அவர் விருப்பம் யாது என வினவினார். அதற்கு சோமாசிமாறர், “தான் செய்யவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் அதற்குச் சுந்தரர் உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மறுக்க விரும்பாத சுந்தரர், சோமாசிமாறரை அழைத்துக்கொண்டுத் திருவாரூர்ப் பெருமானிடம் வந்து வேண்டுகோளைத் தெரிவித்தார். அதற்கு இசைந்த இறைவன், “தான்வரும் வேடம் தெரிந்து இவர் எனக்கு அவிர்ப்பாகம் தர வேண்டும்” என்று பணித்தார்; சோமாசிமாறரும் அதற்குச் சம்மதித்தார்.

      • யாகம் நடைபெறும் இடத்திற்குத் தியாகராசப் பெருமான், புலையர் வேடத்தில், நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கி உடன் பிடித்துக்கொண்டு, தோளில் இறந்துபோன கன்றினைப் போட்டுக்கொண்டு, தடித்த பூணூலணிந்து, தலையில் தலைப்பாகை (முண்டாசு) கட்டிக்கொண்டு, விநாயகரையும், முருகப்பெருமானையும் சிறுவர்களாக்கிக் கொண்டு, உமாதேவியை புலையச்சி வேடத்தில் தலையில் கள்குடம் ஏந்தியவாறு அழைத்துக்கொண்டு வந்தார்; வெறுக்கத்தக்க இக்கோலத்தில் வந்த இறைவனைப் பார்த்து, எல்லோரும் அபசாரம் நேர்ந்து விட்டதென்று எண்ணியும், இக்கோலத்தைக் கண்டு பயந்தும் ஓடினர். ஆனால் சோமாசிமாறரும் அவர் மனைவியாரும் அவ்விடத்திலேயே (அச்சத்துடன் நிற்க – தந்தையார் வருவதைக் குறிப்பால் விநாயகர் சோமாசிமாறருக்கு உணர்த்தி அவர்கள் அச்சத்தை நீக்கினார்) நின்று இறைவனை அந்நீச வடிவிலேயே வீழ்ந்து வணங்கி வரவேற்க – இறைவன் மகிழ்ந்து சோமாசிமாறருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்பது தலவரலாறு.

         

      • சோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து அருள்புரிந்த மூர்த்தமே “காட்சிகொடுத்த நாயகர்” எனப் போற்றப்படுகின்றார். 
      • இறைவன் யாகத்திற்கு நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் “பொங்கு சாராயநல்லூர்” (இன்று வழக்கில் “கொங்கராய ‘ நல்லூர்”) என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் “அடியுக்க மங்கலம்” (இன்று வழக்கில் “அடியக்கமங்கலம்”) என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் “கடா மங்கலம்” என்றும் இன்றும் வழங்குகின்றது.

         

      • சோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கு அம்பர்பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது; இன்று அந்த இடம் “பண்டாரவாடை திருமாளம்” என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது. (2005)

தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - 	1. அடையார் புரமூன்றும், 
					2. புல்கு பொன்னிறம், 
					3. படியுளார் விடையினர்.

 

சிறப்புகள்

      • திருஞானசம்பந்தர் பாடல் பெற்றத் திருத்தலம். 
        • ஆண்டு தோறும் வைகாசி மாதம் சோமாசி மாறனார் யாக விழா நடைபெறுகிறது.
          	சோமாசிமாற நாயனார்
          	அவதாரத் தலம்	: அம்பல் / அம்பர்.
          	வழிபாடு		: குரு வழிபாடு.
          	முத்தித் தலம் 	        : திருவாரூர்.
          	குருபூசை நாள் 	: வைகாசி - ஆயில்யம்.
          

           

      • அதிகார நந்தி மானிட உருவம். 
      • திருக்கோயிலில் ஐந்து கால பூசைகள் நடைபெறுகின்றன. (2005) 
      • சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. முதல் குலோத்துங்கன்,விக்கிரம சோழன், ஆகியோர் காலத்தில் கோயிலுக்குச் செய்த தானங்களைக் கல்வெட்டுக்களால் அறியலாம். 
      • ‘அம்பர்புராணம் – தலபுராணம்” மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.

அமைவிடம் அ/மி. மாகாளேஸ்வரர் திருக்கோயில், கோயில் திருமாளம், பூந்தோட்டம் (அஞ்சல்) – 609 503. நன்னிலம் (வட்டம்), திருவாரூர் (மாவட்டம்). தொடர்பு : 09486601401 மாநிலம் : தமிழ் நாடு பேரளம் – திருவாரூர் இரயில் பாதையில் பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 4-கி.மீ. தூரத்தில் உள்ளது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com