கார்த்திகை மாதம் காலையில் விளக்கேற்றி வழிபட்டால் மகாலட்சுமி அந்த இல்லங்களில் வந்து தங்குகிறாள். மாலையில் விளக்கேற்றி வாசலில் வைத்தால் சிவனும் சக்தியும் ஒரு சேர அந்த இல்லம் வருவார்கள். கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் தீபங்கள் ஏற்றுங்கள். இறையருள் பெற்று எல்லா வளங்களும் கிடைக்கும். கார்த்திகை மாதம் வீட்டில் உள்ள திருவிளக்கில் தீபம் ஏற்றி கணவன், மனைவி இணைந்து மனமுருக வேண்டினால் நினைத்தது நடக்கும்.
சிவன், விஷ்ணு, பிரம்மா மூவருக்கும் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்தபோது, அடி, முடி காண அண்ணாமலையாய் எழுந்து மகாவிஷ்ணுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்தார். அந்த நாள் கார்த்திகை மாதம் பௌர்ணமி.
சக்தி இல்லையேல் சிவனில்லை. சிவனில்லையேல் சக்தி இல்லை என்பதை இவ்வுலகுக்கு பறை சாற்றும் விதமாக, சிவனிடம் தனக்கும் தங்களது சக்தியில் பாதி வேண்டும் என்று கோரிக்கையுடன் உமாதேவி கடும் தவம் மேற்கொண்டார். அதன் பயனாக உமையாளுக்கு கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் சிவபெருமான் தன்னுடலில் இடப்பாகத்தை கொடுத்தார். மகாலட்சுமியின் அம்சமான துளசி தேவி கார்த்திகை மாதம் துவாதசி நாளில், மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டார். கார்த்திகை மாதம் முழுவதும், துளசியால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு.
தன்னைப் பிரிந்து சென்ற திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்று அதன் பயனாக திருமகளுடன் சேர்ந்தார். அது நிகழ்ந்தது கார்த்திகை மாதம். மகாவிஷ்ணு சிவனருள் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5:00 முதல் 6:00 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர்.
கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் அந்தணர்களால், குருவால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், கொள்ளை, திருடுவது போன்ற கொடுஞ்செயல் புரிந்து மனம் திருந்தியவர்கள் பாவம் மற்றும் மனச்சஞ்சலத்தால் ஏற்பட்ட பெண் பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது. கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதி காலையில் நீராடி, சிவ விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.
வைஷ்ணவக் கோயில்களில், ‘பாஞ்சராத்ர தீபம்’ என்று கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், கோயிலுக்கு முன்னே, பனையோலை கொண்டு கூடுகள் அமைக்கப்பட்டு சொக்கப்பனை எரிப்பது வழக்கம். ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்… ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர். ஈசனின்… ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம், அதோமுகம் ஆகிய ஆறு திருமுகங்களிலிருந்து உருவான தீப்பொறியிலிருந்து ஆறுமுகக் கடவுள் அவதரித்ததும் கார்த்திகை மாதம் கார்த்திகை நாளில்தான்!
சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சார்த்தி கவசம் போட்டிருப்பர். கார்த்திகை பௌர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம். தேவர்கள் ஆண்டுதோறும் இந்த நன்னாளில், இறைவனை பூஜிப்பதற்கு வருவதாக ஐதீகம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத ஏகாதசியையொட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச்சிறப்பு வாய்ந்தது.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.