தீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ளது தோரண மலை. உலகிலேயே முதல் முதலில் அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலை. அகத்தியர் தலைமையில் தேரையர் உள்பட பல சித்தர்கள் அமர்ந்து அந்த அற்புத நிகழ்வை செய்துள்ளனர். தோரணை என்றால் கம்பீரம் என்று பொருள். அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இம்மலைப்பகுதி தோரணமலை என பெயர் பெற்றது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது யானை படுத்திருப்பது போல தெரியும். தென்காசி – பாபநாசம் சாலையில் மாதாபுரத்தில் இருந்து இந்த அபூர்வ காட்சியை நாம் காணலாம். இந்த மலையை பற்றிய வரலாறு மிகச் சிறப்பானதாகும். சித்தர் தேரையர் மிகவும் சிறப்பு பெற்றவர். இவருடைய இயற்பெயர் தேரையர் அல்ல. ராமதேவன். அந்தணர் குலத்தில் பிறந்த இவருக்கு, பிறவியிலேயே பேச இயலாது. ஆனாலும் ஆன்மிக ஞானத்தில் தான், திளைக்க விரும்பினார். இதையறிந்த ஔவையார் அகத்தியரிடம் இவரை அழைத்துச்சென்றார்.அகத்தியர், தனக்கு சீடராக அவரை ஏற்றுக்கொண்டார். அகத்தியர் எங்கு சென்றாலும் தேரையரை தன்னுடனே அழைத்துச் சென்றார்.

ஒருசமயம். கூன் விழுந்த பாண்டிய மன்னருக்கு அரண்மனை வைத்தியர்கள் பல மருத்துவங்கள் செய்தும் பலன் இல்லை. எனவே அகத்தியரை தஞ்சம் அடைந்தார். “அய்யனே… என் கூனை தாங்கள் தான் நீக்கித் தர வேண்டும்” என்று கரம் பற்றி கதறினார். அகத்தியர், “கவலைப் படாதே மன்னா… உன் கூனை நான் நிமிர்த்தி விடுவேன்” என்று அவரை தேற்றினார். அரசன் வைத்தியத்திற்காக தக்க தருணத்தினைத் தேடி காத்திருந்தார். குளிர் காலம் வந்தது. அகத்தியர், தனது சீடர்களை அனுப்பி தனக்கு தேவையான மூலிகைகளை சேகரித்தார். பின் அந்த மூலிகைகளை பக்குவப்படுத்தினார். அதை இடித்து சாறெடுத்தார். நெருப்பில் வைத்து பதப்படுத்தினார். அவருக்கு உதவியாக தேரையரும் உடன் இருந்தார். அந்த சமயத்தில் அகத்தியப் பெருமானை தேடி சிலர் வந்திருந்தனர். அவர்களைக் காண தனது குடிலை விட்டு வெளியே வந்தார் அகத்தியர். அந்த சமயத்தில் அடுப்பில் கொதித்து கொண்டிருந்தது மூலிகைச் சாறு.

அதை கண்ணும் கருத்துமாக பாதுகாத்துக் கொண்டிருந்தார் தேரையர். திடீரென்று மேற்கூரையில் இருந்த, வளைந்த மூங்கில் சடசடவென்று நிமிர்ந்தது.
கொதிக்கும், மூலிகை சாற்றின் ஆவிதான் இந்த மூங்கிலை நிமிர்த்த காரணம் என்று நினைத்தார் தேரையர். இதுதான் தக்க தருணமென, கொதிக்கும் சாற்றை அப்படியே இறக்கி வைத்தார். அகத்தியர், “ஏன் இப்படிசெய்தாய்?” என்று கேட்டார். “அடுப்பில் இருந்து சரியான பதத்தில் தான் இறக்கினேன்” என்று மூங்கிலை காட்டி சைகையில் விளக்கினார் தேரையர். மனம் மகிழ்ந்த அகத்தியர் அவரை கட்டி அணைத்துப் பாராட்டினார். அந்த காய்ச்சிய தைலத்தினை கூன் பாண்டியனுக்கு முதுகில் தடவி வர, அவன் கூன், இருந்த இடமே தெரியாமல் மறைந்து விட்டது. அதன்பிறகு அகத்தியரின் பிரதான சீடராகி விட்டார் தேரையர். அவருக்கு தேரையர் என்று ஏன் பெயர் வந்தது? அந்தச் சம்பவம் நடந்த இடம் தான் தோரண மலை என்கிறார்கள் ஆன்மிக அன்பர்கள்.

காசி வர்மன் என்ற மன்னன் தென் தமிழகத்தினை ஆண்டு வந்தான். இவனுக்கு தீராத தலைவலி. தன்னுடைய அரண்மனை மட்டுமல்லாமல் பல இடத்தில் இருந்து ராஜ வைத்தியர்கள் எல்லாம் கூட்டி வந்து வைத்தியம் பார்த்தார். ஆனால் தலைவலி தீர வில்லை. எனவே அகத்தியரை நாடினார். அகத்திய பெருமான், அவரை நன்கு சோதித்தார். தலைவலிக்கு காரணம் கபாலத்தின் உள்ளே நுழைந்த தேரை என்று கண்டுபிடித்தார். அதாவது. அரசன் தூங்கும் போது ஒரு தேரைக் குஞ்சு மூக்கு வழியாக, காற்றை சுவாசிக்கும் போது தலைக்குள் நுழைந்து விட்டது. “மன்னா உன் தலைக்குள் தேரை வளர்ந்து கொண்டே இருக்கிறது. தேரை வளர வளர உனக்கு தலைவலி அதிகரிக்கிறது. எனவே அந்த தலைவலி தீர தேரையை வெளியே எடுக்கவேண்டும்”. என்றார் அகத்தியர்.

மன்னர் அப்படியே அதிர்ந்து விட்டார். தலைக்குள் இருக்கும் தேரையை வெளியே எடுக்க முடியுமா..? என்று குழப்பத்தினை தெரிந்து கொண்ட அகத்தியர். “பயப்படாதே மன்னா, உனக்கு நான் கபாலத்தை அறுத்து வைத்தியம் செய்வேன். தேரையை வெளியே எடுப்பேன்” என்றார். அகத்திய பெருமான் மீது நம்பிக்கை வைத்து, இந்த அபாய வைத்தியத்துக்கு ஒத்துக் கொண்டார் மன்னர். மயக்கம் தரும் மூலிகை மூலம் மன்னரை மயக்கத்தில் ஆழ்த்தினார் அகத்தியர். ஐந்து நிமிடத்தில் தலையின் மேலே உள்ள கபால ஓட்டை திறந்தார். அங்கே.. மூளை மீது தேரை ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டிருந்தது. தேரையை எடுக்க வேண்டும். எடுக்கும்போது, மூளை மீது பட்டுவிட்டால், சேதமடைந்து மன்னன் பைத்தியம் ஆகி விடுவான். எனவே, எந்த பிரச்னையும் இல்லாமல் தேரையை எடுக்கவேண்டும். எப்படி என்று யோசித்தார். குருநாதர் திகைத்து நிற்பதை கண்ட ராமதேவன், வேகமாக சென்று வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். அந்த தண்ணீரை தேரை கண்ணில் படும் படி அலசிக் காட்டினார்.

அதிகமான தண்ணீரை கண்ட தேரை சந்தோஷத்துடன் பாத்திரத்துக்குள் குதித்தது. இது தான் சமயம் என்று அகத்தியர் கபாலத்தினை மூடினார். பின் சந்தானகரணி என்னும் மூலிகை கொண்டு கபாலத்தினை அடைத்துவிட்டார். குணமடைந்த அரசன் அரண்மனை சென்று பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் நாட்டை ஆண்டார். சீடன் ராமதேவனின் அறிவுத்திறனைக் கண்ட அகத்தியர் அவரைப் பார்த்து, “தேரையை அகற்றிய காரணத்தினால் இன்றிலிந்து நீ…தேரையன் என்று அழைக்கப்படுவாய்” என கூறினார். அதுவே அவரது பெயராக மாறியது. உலகத்தில் முதல் முதலில் நடந்த அறுவை சிகிச்சையும் இதுவாகத்தான் இருக்க முடியும். இந்த மலையில் 64 சுனைகள் உள்ளன. இவை அனைத்துமே நோய் தீர்க்கும் அற்புத சுனைகளாகும். தோரணமலைக்கு ராமபிரான் வந்துள்ளார். ராமபிரான் இப்பகுதியில் வாழ்ந்தார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. மாய மானை துரத்திக் கொண்டு ராமர் தென் பகுதிக்கு வந்த போது ஓரிடத்தில் மான் மாயமாக மறைந்ததாம். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அந்த இடம் உள்ளது.

அதை “மாயமான் குறிச்சி” என்றழைக்கிறார்கள். மற்றொரு இடத்தில் மான் தலை கீழாக (குத்தரை)பாய்ந்தது. அந்த இடம் “குத்தரை பாய்ஞ்சான்” என்று அழைக்கப்படுகிறது. ஆலங்குளம் – தென்காசி ரோட்டில் ராமர்கோயில் இருக்கும் மலைக்கு “ஒக்கநின்றான் பொத்தை” என்று பெயர். ராமர் மானை தேடி வந்தபோது ஒரு சாய்வாக நின்று பார்த்த இடம். அதாவது அவர் ஒரு பக்கமாக சரிந்து நின்ற பொத்தை ஒக்கநின்றான் பொத்தை என்றழைக்கப்படுகிறது. அந்த மலைக்கு கீழே உள்ள ஓடைக்கு பெயர் மூக்கறுத்தான் ஓடை. ராவணனின் தங்கை சூர்ப்பணகை மூக்கை லட்சுமணர் அறுத்த இடம் தான் மூக்கறுத்தான் ஓடை. இந்த சம்பவங்கள் எல்லாம் நடக்கும் முன்பே அத்ரி முனிவர் ஆசிரமத்தில் அனுசுயா தேவியோடு தங்கியிருந்தார்கள். சீதாதேவி வனவாசம் வரும் போது, தன்னோடு நகை எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் ராவணன் சிறையெடுத்துச் சென்றபோது, வழி நெடுக்க முத்து மாலையை சீதாதேவி போட்டுச் சென்றுள்ளார். எப்படி சீதாதேவிக்கு முத்து மாலை கிடைத்தது.

முத்து, தூத்துக்குடியில் கடலில் கிடைக்கும் பொருள். அயோத்திக்கும் முத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும், வனவாசம் வரும் பெண் நகை அணிகலன் அணிந்து வர சாத்தியம் இல்லை. எனவே, அந்த முத்துகளை அவர் அயோத்தியில் இருந்து கொண்டு வரவில்லை. ஆனால், முத்தால் உருவான மாலைகளை அனுசுயா தேவி அன்போடு, சீதாதேவிக்கு கொடுத்தார். ராவணன் சீதாதேவியை சிறையெடுத்துக்கொண்டு சென்றபோது, அவர் தனது கழுத்தில் உள்ள முத்துமாலையை வழியெங்கும் போட்டுக்கொண்டே சென்றார். இந்த முத்து மாலைகளை எடுத்துக்கொண்டு தான் அனுமன் இலங்கையில் சீதாதேவி இருப்பதை கண்டு பிடித்தார். முத்து மாலை விழுந்த இடங்கள் எல்லாம் புராண புகழ் பெற்றவையானது. தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள முத்துமாலையம்மன் உருவாக காரணமும் சீதாதேவியின் முத்துமாலை அங்கு விழுந்த காரணமே. ராவணன் சிறையெடுத்துச் சென்றபோது ஜடாயு அவனை எதிர்த்துப் போராடித் தோற்ற இடம் தற்போதும் தாமிரபரணி கரையில் அருகன் குளம் என்னும் இடத்தில் “ஜடாயு தீர்த்தம்” என்றழைக்கப்படுகிறது.

குரங்குகள் தட்டு தட்டாக நின்ற இடம் குரங்கன் தட்டு. குரங்கு அணிஅணியாக நின்ற இடம் குரங்கணி. அனுமன் லட்சுமணரை காப்பாற்ற சஞ்சீவி மலையுடன் தாவிய இடம் மகேந்திர கிரிமலை. இது போன்ற ஒருசுவடுதான் தோரண மலையில் உள்ள ராமர் பாதம். சீதையை தேடி வந்த போது அவர் பாதம் தோரணமலையில்உருவாகியுள்ளது. இத்தகைய சிறப்புகள் கொண்ட தோரண மலையில் தான் தேரையர் சித்தரின் சமாதி உள்ளது. இந்த தோரண மலையில் முருகன் ஆலயம் உள்ளது. மலையின் அடிவாரத்தில் வல்லப விநாயகர், கன்னிமார் அம்மன், குரு பகவான் ஆகியோருக்கான சந்நதிகள் உள்ளன. நவகிரகங்களுக்கு தனிச் சந்நதி அமைந்துள்ளது. சிவபெருமான், கிருஷ்ணண், சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோரின் சுதைச் சிற்பங்களும் உள்ளன. மலைக்குச் செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சந்நதியில் சுதையாலான பால முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்க முடியாதவர்கள் கீழே இவரை தரிசித்து அருள் பெறலாம். மலை உச்சியை அடைய 926 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.

உச்சியில் உள்ள குகையில் கையில் வேல் ஏந்தி, மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் மூலவரான தோரணமலை முருகப்பெருமான் அருட் பாலிக்கிறார். அவருக்கு இடது புறம் சற்று உயரமான இடத்தில் சுனை ஒன்று உள்ளது. வலது புறத்தில் மற்றொரு சுனை உள்ளது. அந்த சுனைக்குள் தான் பல காலமாக இங்கே பிரதிஷ்டை செய்துள்ள முருகன் சிலை இருந்துள்ளது. எதிரே ராமர் பாதம். அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு ஒரு கோயில். 1000 வருடங்களுக்கு முன்பு அகத்தியரின் மருத்துவமனையாக விளங்கிய இந்த தோரணமலை நாளடைவில் அப்படியே தூர்ந்து விட்டது. இங்கு முருகனுக்கு அமைக்கப்பட்டிருந்த கோயிலும் காணமல் போய் விட்டது. இதற்கிடையில் இந்த பகுதியில் உள்ள ஒரு ஊர் பெரியவர் கனவில் தோன்றி, நான் அருகில் உள்ள சுனையில் கிடக்கிறேன். என்னை எடுத்து வணங்குங்கள் என்று முருகப்பெருமான் கூறினார். அதன் படி சுனையில் தேடியபோது, அங்கே முருகன் சிலை கிடைத்தது. அதை எடுத்து தற்போது உள்ள இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்தனர்.

அந்த சமயத்தில் ஆசிரியர் ஆதிநாராயணன் என்பவர் இந்த கோயிலை மக்களுக்கு அறிமுகப் படுத்த முயற்சி செய்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் தோரணமலை குறித்த விளம்பரப் பலகையை காட்டினர். ஒரு கோயிலுக்கு விளம்பரமாக இது போல் சினிமா தியேட்டரில் ஸ்லைடாக காட்டிய வரலாறு வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை. அதை பார்த்து பக்தர்கள் தோரணமலை வர ஆரம்பித்தனர்.
தற்போதும் கூட இங்கே தீராத நோயால் அவதியுறுபவர்கள் வந்து பாறையில் அமர்ந்து தியானம் செய்தால், நோய் தீருகிறது. மருத்துவ படிப்புக்கு மனு செய்து விட்டு, இங்கே அமர்ந்து தியானம் செய்தால், இடம் கிடைக்கிறது. இக்கோயிலில் தைப் பூசம், கார்த்திகை திருவிழா, பங்குனி உத்திரம், உள்பட பல விழாக்கள் நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டம், தென்காசி – அம்பாசமுத்திரம் ரோட்டில் மாதாபுரம் என்னும் இடத்தில் இறங்கி ஆட்டோவில் தோரணமலைக்கு செல்லலாம். மாதாபுரம் விலக்கிலிருந்து மினி பஸ் வசதி உண்டு. தினமும் காலை 9 மணியிலிருந்து 3 மணி வரை நடை திறந்து இருக்கும். தொடர்புக்கு 99657 62002, 7695962002 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com