துன்பங்களை நீக்கும் விஷ்ணுபதி புண்ணிய காலம்

ஆவணி மாதப் பிறப்பன்று, காலண்டரில் ‘விஷ்ணுபதி புண்ணிய காலம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பலரும் கவனித்திருப்போம். ஒரு வருடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வரக்கூடிய அந்த நாட்களில் பெருமாளையும், தாயாரையும் வணங்கி வேண்டுதல்களை செய்வது ஐதீகம்.

தமிழ் மாதக் கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். அது, ஜோதிட ரீதியாக சூரியனின் ஸ்திர ராசி சஞ்சார காலமாகவும் அமைகிறது.

அதேபோல சிவனுக்குரிய தமிழ் மாதங்களாக ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. அந்த மாதங் களின் முதல் நாள் ‘ஷடசீதி’ புண்ணிய காலம் ஆகும். ஷடங்கன் என்பது சிவனைக் குறிப்பதாகும். ஜோதிட ரீதியாக அந்த நான்கு மாதங்களும் சூரியனின் உபய ராசி சஞ்சார காலமாகவும் அமைகின்றன.

மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கு உரியது ‘விஷூ புண்ணிய காலம்’ ஆகும். அதாவது, பன்னிரண்டு தமிழ் மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. அந்த மாதங்களின் முதல் நாள் விஷூ புண்ணிய காலம் என்று குறிப்பிடப்பட்டு, தலை எழுத்தை மாற்றி எழுதக் கூடிய பிரம்மாவை வணங்கு வதற்குரிய நாட்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஜோதிட ரீதியாக, அந்த காலகட்டம் சூரியனது சர ராசி சஞ்சார மாதங்களாகவும் அமைகிறது.

ஏகாதசி திதியை, மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாகவும், திதிகளில் சிறப்பான ஒன்றாகவும் சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி நாளில் செய்யக்கூடிய பூஜை மற்றும் விரதம் ஆகியவை சிறப்பான பலன்களை அளிக்கும் என்பது ஐதீகம். ஆனால், ஏகாதசியை விட, பல மடங்கு புண்ணிய பலன்களை விஷ்ணுபதி புண்ணிய காலம் அளிப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஒரு நாளில் மகாவிஷ்ணு மற்றும் தாயார் ஆகிய இருவரது அருளையும் பூரணமாக பெறலாம் என்றும் சான்றோர்கள் சொல்கின்றனர்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம். இந்த அவதாரத்தை எடுத்த நோக்கம் நிறைவேறிய பின்னரும் கூட நரசிம்மரின் கோபம் குறையவில்லை. அந்த கோபத்தை சமாளிக்க இயலாத அனைத்துத் தேவர்களும், முனிவர்களும், மகாலட்சுமியைச் சரணடைந்து நரசிம்மரின் உக்ரத்தைத் தணிக்க வேண்டினார்கள்.

மகாலட்சுமியும் அவர்களது வேண்டுகோளை ஏற்று, உக்ர நரசிம்மர் அருகில் சென்றாள். அவளது நிழல் நரசிம்மர் மீது பட்டவுடன், நரசிம்மரும், மகாலட்சுமியும் இணைந்து, சாந்த சொரூபமான லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தனர். அவ்வாறு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் மகாவிஷ்ணு, காட்சி கொடுத்த புனித நேரமே ‘விஷ்ணுபதி புண்ணிய காலம்’ என்றும் சான்றோர்கள் எடுத்துரைக்கின்றனர்.

இந்த புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் வீட்டிலேயே பக்தியுடன் வழிபட்டு, தேவைகளையும், வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை செய்யலாம். அல்லது அருகில் உள்ள பெருமாள் ஆலயத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றும் வழிபடலாம். துளசி பூஜை, கோ பூஜை மற்றும் மகாலட்சுமிக்கு உரிய வழிபாடுகளையும் செய்து வரலாம். அன்றைய தினத்தில் விரத நாட்களில் தவிர்க்கக்கூடிய விஷயங்களை தவிர்த்துவிட வேண்டும். ஒரு தடவை விஷ்ணுபதி புண்ணிய கால விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், பல ஏகாதசி விரதங்களை கடைப்பிடித்த பலனை பெறுகிறார்கள் என சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த விரதத்தை கடைப் பிடித்து, வாழ்க்கைக்குத் தேவையானவற்றை பெற்று வளமான வாழ்வை அடைவதுடன், மோட்சத்தையும் பெறலாம்.

அன்றைய தினம் பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் கொடி மரத்தை வணங்கி, 27 தடவை பிரகாரத்தை வலம் வர வேண்டும். எண்ணிக்கைக்காக கைகளில் 27 பூக்களை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடி மரத்திற்கு முன் வைக்கலாம். வலம் வந்த பின்னர் மீண்டும் கொடி மரத்தை வணங்கி விட்டு, கோவிலில் அருள்பாலிக்கும் தாயார் மற்றும் பெருமாளை தரிசனம் செய்து வேண்டுதல்களை சமர்ப்பிக்கலாம். இறை சக்தியால் அடுத்து வரக்கூடிய மூன்று விஷ்ணுபதி புண்ணிய காலம் பூர்த்தி அடைவதற்குள்ளாக பக்தர்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com