தேடி வந்து பக்தனுக்கு உதவிய கோட்டீஸ்வரர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருக்கோடிக்காவல். இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் கோட்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தன்னை கை தொழும் அடியார்களிடம் திருவிளையாடல் நடத்துவதே ஈசனுக்கு பேரின்பம். அந்த வகையில் சிவபக்தனான ஒருவருக்கு இத்தலத்து இறைவன் கோட்டீஸ்வரர் தேடி வந்து வழித்துணையாய் சென்றுள்ளார். ஹரிதத்தர் என்று ஒரு சிவனடியார் இருந்தார். வைணவ குலத்தில் தோன்றிய இவர், சிவமே பரம்பொருள் என வாழ்ந்து வந்தார். இவர் திருவாலங்காடு, திருவாடுதுறை, தென் குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை, திருக்கோடிக்கா ஆகிய தலங்களை தினசரி தரிசித்து விட்டு, அர்த்தஜாம வழிபாட்டுக்கு கஞ்சனூருக்கு வருவது வழக்கம். ஒருநாள் பெருமழை பெய்தது. ஹரிதத்தரால் திருக்கோடிக்காவிலிருந்து கஞ்சனூர் செல்ல இயலவில்லை. மனம் வருந்திய அவரை நாடி ஏழை பக்தன் ஒருவன் வந்தான்.

அவருக்கு துணையாக இருந்து அவரை கஞ்சனூருக்கு அழைத்துச் சென்றான். கஞ்சனூரில் அர்த்தஜாம வழிபாட்டை இனிதாக முடித்தார் ஹரிதத்தர். அக்கோயிலில் தனக்குப் பிரசாதமாகக் கிடைத்த அன்னத்தையும் சுண்டலையும் அந்த ஏழை பக்தனுக்குக் கொடுத்தார். மறுநாள் திருக்கோடிக்காவல் வந்து இறைவனை தரிசித்த ஹரிதத்தருக்கு அதிர்ச்சி. அவர் அந்த ஏழை பக்தனுக்கு கஞ்சனூரில் கொடுத்த அன்னமும், சுண்டலும் இறைவன் முன்னே இருந்தது. ஹாிதத்தருக்கு உண்மை புரிந்தது. தனக்கு வழித்துணையாக வந்தவர் திருக்கோட்டீஸ்வரர்தான் என்பதை உணா்ந்து மனம் நெகிழ்ந்து மகிழ்ந்தார் ஹரிதத்தர். திருக்கோடிக்காவல் தலத்தில் வசிப்பவர்களுக்கு காசியைப் போல எம பயம் என்பது கிடையாது. இந்த ஊரில் மயான பூமி என்ற இடம் ஒன்று தனியாகக் கிடையாது. இவ்வூரில் வசிப்பவர்களை, காவிரி நதியின் மறுகரைக்குக் கொண்டு சென்று தகனம் செய்யும் பழக்கம் ஆதிகாலம் முதல் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தலத்திற்கு பல சிறப்புகள் உண்டு.

ஒரு சமயம் கைலாயத்தையும், திருக்கோடிக்காவலையும் ஒரு தராசில் வைத்து பார்த்தபோது இத்தலம் உயர்ந்து கைலாயம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இத்தலத்தில் கணபதியின் மகிமை கூடியுள்ளது. இத்தலத்தில் செய்யும் ஜபம், தியானம், ஹோமம் யாவும் மும்மடங்காகப் பலிக்கும். உத்திரவாஹினியாக இங்கு இருக்கும் காவிரியில் கார்த்திகை மாதம் ஞாயிறு விடியற்காலையில் நீராடினால் அனைத்து பாவங்களும் தொலைந்து போகும் என சிவபெருமான் அருளியுள்ளதாக ஐதீகம். தன்னை முழுமையாக நம்பும் பக்தர்களுக்கு என்றென்றும் துணையிருக்கிறார் திருக்கோட்டீஸ்வரர். அம்பாள் பெயர். அழகுமிகு வடிவம்மை. திரிபுரசுந்தரி என்பது அம்பிகையின் இன்னொரு பெயர். இத்தலத்தின் தீர்த்தம் சிருங்க தீர்த்தம். தலமரம் பிரம்பு. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளை கடந்த பழமையான ஆலயம் இது. இரண்டு திருச்சுற்றுகளோடு அமைந்துள்ளது இந்த ஆலயம்.

தென்மேற்கு மூலையில் கரையேற்று விநாயகர் வீற்றுள்ளார். அகத்தியரால் மணலில் பிடித்து பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தி அது. காலப்போக்கில் அதன் உருவம் சற்றே கரைந்து போயிருப்பினும் அதன் பழமையும் தூய்மையும் நம்மை கவருகின்றது. வடக்குப் பிராகாரத்தில் சண்டீஸ்வரர் சந்நதியும் பிரம்மா சந்நதியும் உள்ளன. கிழக்குப் பிராகாரத்தில் பைரவர், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் திருமேனிகள் உள்ளன. தெற்குப் பிராகாரத்தில் கணபதி, சரஸ்வதி லட்சுமி தேவியின் சந்நதிகள் உள்ளன. இந்த ஆலயத்தின் அருள்பாலிக்கும் இறைவனே நவகிரகங்களின் சக்தியை தானே ஏற்றுக் கொண்டுள்ளதால் அவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலனை அடையலாம். என்பதால், இந்த ஆலயத்தில் நவகிரகங்கள் இல்லை. மேற்குப் பிராகாரத்தில் நாகலிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வடக்குப் பிராகாரத்தில் பிரம்மாவும், கிழக்குப் பிராகாரத்தில் கால பைரவர், சூரியன், சந்திரன், நாதேஸ்வரர், சண்டீஸ்வரர், கஹேர்னேஸ்வரர், பால சனீஸ்வரர் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரி தனிச் சந்நதியிலும், தெற்கு பிரகாரத்தில் பக்த கணபதி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லட்சுமியும் அருள்பாலிக்கின்றனர்.

தேவ கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கில் பிரம்மா, பிச்சாண்டவர், துர்க்கை, அர்த்த நாரீஸ்வரர் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. ஒருமுறை இத்தலத்து இறைவனைக் காண எமதர்மன் அவசரமாக உள்ளே நுழைய, நந்தி தேவர் அவரைத் தடுத்து விடுகிறார். “இறைவன் அம்பிகையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். எனவே சற்று காத்திருங்கள். உங்களால் முடியாது என்றால் சித்ரகுப்தனை நிற்கச் சொல்லுங்கள்” என்று நந்திதேவர் கூற இருவரும் நின்று விடுகின்றனர். சுவாமி சந்நதியின் வெளி மண்டபத்தின் இருபுறமும் எமதர்மனும், சித்ர குப்தனும் பணிவுடன் சிலையாக நின்று கொண்டிருக்கின்றனர். கர்ப்பக்கிரக நுழைவாயிலில் பெரிய வடிவில் இரண்டு துவார பாலகர்களின் சிலைகள் உள்ளன. உள்ளே இறைவன் திருக்கோட்டீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். வெளியே அம்பாள் திரிபுர சுந்தரியின் சந்நதி உள்ளது. அன்னை தென்முகம் நோக்கி அருள் பாலிக்கின்றாள். இக்கோயில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், சூரியனார் கோவிலிருந்து 6 கி.மீ தொலைவிலும் உள்ள திருக்கோடிக்காவல் என்ற ஊரில் உள்ளது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com