தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

பழனி கிரிவீதியில் அலகு குத்தி வந்த பக்தரை படத்தில் காணலாம்.பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 2-ந்தேதி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலை முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் வீதியுலா வருகிறார். இரவு 8.30 மணிக்கு புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, பெரிய தங்கமயில் வாகனம் மற்றும் தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி உலா வருகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்கு மணக்கோலத்தில் சுவாமி வெள்ளி ரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் தைப்பூச தினத்தன்று, அதிகாலை 5 மணிக்கு சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து அன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்த முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பழனிக்கு பாதயாத்திரையாகவும், பஸ், ரெயில் மற்றும் தங்கள் சொந்த வாகனங்கள் மூலமும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக காரைக்குடி, மதுரை, திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல், தாராபுரம், உடுமலை பகுதிகளில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி, அலகு குத்தியும் பழனிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஒட்டன்சத்திரம் வழியே வரும் பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல் சாலையோரத்தில் மின்விளக்குகள், நீர்ப்பந்தல், அன்னதான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களின் நலனுக்காக அனைத்து துறை அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தேவையான வசதிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல், மதுரை மார்க்கமாக பழனிக்கு வரும் பஸ்களை நிறுத்துவதற்காக தற்காலிக பஸ்நிலையம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அவை இன்று முதல் செயல்பட தொடங்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று, நாளை ஆகிய நாட்களில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் நலனுக்காகவும் பழனி- ஒட்டன்சத்திரம் இடையே ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட உள்ளது.
பக்தர்கள் கூட்டம் அடிவார பகுதியில் அதிகம் இருப்பதால் தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும் 2 நாட்கள் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்படும். இதனால் தேவர்சிலை, சன்னதி ரோடு, வடக்கு கிரிவீதி ஆகிய இடங்களில் பக்தர்கள் வெகு நேரம் காத்திருக்க நேரிடும்.
ஏற்கனவே பழனியில் தற்போது வெயில் வாட்டி வருவதால் பக்தர்களின் நலன் கருதி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பக்தர்கள் வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள் என பொதுமக்கள், பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.