நிலைத்த பக்தி, நீடித்த பொறுமை : என் இறைவனே சாயிபாபா

என் இறைவனே சாயிபாபா. என் மீது எத்தனை விதமான துன்பங்கள் என்னை சூழ்ந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்து எனக்கு உதவி செய்யுங்கள். என் தன்னம்பிக்கை தடுமாறுகிறது, நான் நிலைகுலைந்து விடுவேன் என மற்றவர்கள் என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள். மனம் நொந்து, மனம் சோர்ந்து போயிருக்கிறேன். என் இறைவனே சாயி பாபா! தங்களுக்கு நன்மை நடப்பதற்காக என்னைத்தேடி வருவோருடன் எனக்காக நீங்கள் இருப்பதையும், எனது விரோதிகள் என்னை நெருங்காமல் இருக்க அவர்கள் மத்தியில் எனது சார்பாக இருப்பதையும் பிறர் உணரும்படி செய்யுங்கள். எனது உழைப்பையும் அதன் பலனையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட என்னோடு இருந்து கொண்டே எனக்கு எதிராகச் செயல்படுகிறவர்களிடமிருந்து என்னை நீங்கள் காப்பாற்றுவதை பிறர் உணர்ந்து கொள்ளட்டும்.

என்னுடைய மலை போன்ற பிரச்சினைகளையும் தோள் மீது சுமந்து கொண்டு, வலது கரத்தைப் பிடித்து நீங்கள் என்னை வழிநடத்துவதை மற்றவர்கள் அறிந்து கொள்ளட்டும். துக்கமான நாட்களிலும், சோகமான நேரங்களிலும் நான் உங்கள் நாமத்தையே உதடுகளால் உச்சரித்துக் கொண்டு இருக்கிறேன். எமனும் பயப்படுகிற உங்கள் திருப்பெயரின் சக்தி முன்பு எனது கஷ்டங்கள் நிற்காது என்பதை நான் உணர அருள் செய்யுங்கள். எல்லோரும் தங்கள் செல்வங்களால் உங்களுக்கு சேவை செய்து, மகிழ்ச்சியால் துதிக்கிறார்கள், தங்கள் முதற்பலனை காணிக்கையாகத் தருகிறார்கள்.

இந்த ஏழையிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்? உண்ணும் ஒவ்வொரு பருக்கையும், பருகும் ஒவ்வொரு துளி நீரும் நீங்கள் எனக்கு அளிக்கிறீர்கள். நீங்கள் தருவதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் கைகளில் என்னை ஒப்படைக்காதீர்கள். எனது புலம்பல்கள் பாடல்களாகவும், எனது அனுபவங்கள் பிறருக்குக் கீர்த்தனைகளாகவும் அமையட்டும். நிலைத்த பக்தியும் நீடித்த பொறுமையும், கடுமை காட்டாத முகமும், புறங்கூறாத இதயமும் எனக்குத் தந்தருளும். என்றென்றைக்கும் உங்களுக்காகக் காத்திருக்கிற கண்களைத் தந்தருளும். நீங்களே எனது புகலிடம் என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் எனக்குள் மாற்றத்தைத் தாருங்கள் சாயி நாதா! இந்தப் பிரார்த்தனைகளோடு தங்கள் திருவடிகளை சரணடைகிறேன்.
Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com