மகாபாரதம் சொல்லும் தத்துவம்

மகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.

அப்படிப்பட்ட சிறப்புமிக்க காவியத்தை அறிந்த ஒரு இளைஞனுக்கு பல கேள்விகள் உள்ளத்தில் எழுந்தன. ‘உண்மையிலேயே மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் போர் எதை சொல்ல வருகிறது?’ என்பதை அறிய அவனது மனம் ஆவல் கொண்டது. 18 நாட்கள் நடைபெற்ற அந்தப் போரில், மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீத ஆண்கள் இறந்து விட்டனர் என்பதை அறிந்த அந்த இளைஞனுக்கு, குருசேத்திரத்தை நேரில் பார்க்கும் விருப்பம் உண்டானது.

புறப்பட்டுச் சென்று விட்டான். அவன் இப்போது, பாரதப் போர் நடந்த இடத்தின் மேல் நின்று கொண்டிருந்தான். தன்னையே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.

‘கவுரவர்களும்.. பாண்டவர்களும் போரிட்ட ரத்தத்தில் தர்மத்தை நிலைநாட்டிய பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா?’

‘கிருஷ்ண பரமாத்மா இங்கே தான், அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்து தேர் ஓட்டினாரா?’ என்று வளர்ந்து கொண்டே போன அவனது சிந்தைக்குள் மீண்டும், அந்தக் கேள்வி எழுந்தது. ‘உண்மையில் பாரதப் போர் சொல்லும் தத்துவம் தான் என்ன?’

அந்தக் கேள்வியோடு, அந்த பகுதியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே ஒரு குரல் கேட்டது. ‘உன்னால் ஒருபோதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது?’

குரல் வந்த திசையை நோக்கி தன் பார்வையை செலுத்தினார். அங்கே புழுதிகளுக்கு இடையில் காவி உடை அணிந்த ஒரு துறவி தென்பட்டார்.

துறவியின் குரல் மீண்டும் ஒலித்தது. ‘நீ குருசேத்திரப் போரைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் போர் உண்மையில் யார், யாருக்கு இடையே, எதன் பொருட்டு நடைபெற்றது என்பதை அறிந்து கொள்ளாமல், அந்தப் போரைப் பற்றி உன்னால் தெரிந்து கொள்ள முடியாது.

‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’ குழப்பத்தோடு துறவியைப் பார்த்தான் இளைஞன்.

துறவி சொல்லத் தொடங்கினார். ‘மகாபாரதம் மிகப்பெரும் காவியம். ஆகச் சிறந்த இதிகாசம். அது உண்மைச் சம்பவம் என்பதை விட, அந்த நிகழ்வில் கலியுகத்திற்கான தத்துவம் அடங்கியிருக்கிறது என்பதைத் தான் நாம் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.’

துறவியின் வார்த்தையில் தனக்கான பதில் கிடைத்து விடும் என்ற ஆர்வத்தில், ‘அது என்ன தத்துவம்? எனக்கு கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்?’ என்றான் அந்த இளைஞன்.

துறவியிடம் இருந்து மகாபாரதத்தில் புதைந்திருக்கும் தத்துவம் வெளிப்படத் தொடங்கியது. ‘பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம் புலன்கள் தான். அந்த ஐம்புலன்களையும், தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கவுரவர்கள். தீமைகள் பலவாறான எண்ணிக்கையில், படைபலம் மிகுந்த சக்தியோடு இருக்கும் என்பதைச் சொல்லவே, மகாபாரதம் கவுரவர்களின் எண்ணிக்கையை நூறாக காட்டியிருக்கிறது. எண்ணிக்கையில் மிகுந்த கவுரவர்களை (தீமைகளை) எதிர்த்து, உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா?’

துறவியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான் இளைஞன்.

அவனது தயக்கத்தை அறிந்து, துறவியே தொடர்ந்தார். ‘முடியும். அதற்கு கிருஷ்ண பரமாத்மா உன்னுடைய தேரை செலுத்த வேண்டும்.’

இளைஞனுக்கு இப்போது தலை சுற்றியது. ‘என்னுடைய தேரை கிருஷ்ணர் எப்படி செலுத்துவார்?’

துறவி மீண்டும் தொடர்ந்தார், ‘இங்கே நான் கிருஷ்ணர் என்று சொன்னது, உன் மனசாட்சியை.. உன் ஆத்மாவை. உன் மனசாட்சிதான் உன்னுடைய சிறந்த வழிகாட்டி. அதன் பொறுப்பின் உன் வாழ்க்கையை, நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை’ என்றார்.

இளைஞனுக்கு ஏதோ புரிந்தது போன்றும், புரியாதது போன்றும் இருந்தது. அதோடு ஒரு சந்தேகமும் எழுந்தது. அதை துறவியிடமே கேட்டான். ‘கவுரவர்கள் தீயவர்கள் என்றால், பெரியவர்களும், தலைசிறந்தவர்களுமான துரோணாச்சாரியாரும், பீஷ்மரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிட்டது ஏன்?’

‘நீ வளர வளர உனக்கு மூத்தவர்களாக இருப்பவர்களைப் பற்றிய உனது கண்ணோட்டம் மாறக்கூடும். நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று நினைத்தாயோ, அவர்கள் உண்மையில் அப்படி இல்லாமல் இருக்கலாம். அவர்களிடமும் தவறுகள் இருக்கிறது என்பதை நீ உணர்வாய். அந்த நேரத்தில் அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா?, அவர்கள் உனக்கு தேவையா, இல்லையா? என்பதை நீ தான் தீர் மானிக்க வேண்டும். ஆனால் உன் நன்மைக்காக அவர்கள் போராட வேண்டும் என்று ஒரு கட்டத்தில் நீ விரும்புவாய். இதுதான் வாழ்க்கையின் கடினமான பகுதி. கீதை சொல்லும் பாடமும் இது தான்’ என்றார் துறவி.

பாரத இதிகாசமும், கீதை உணர்த்தும் பாடமும் ஓரளவு புரிந்ததால், அந்த இளைஞனுக்கு பிரமிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் இப்போதும் அவனிடம் ஒரு கேள்வி இருந்தது. ‘அப்படியானால் கர்ணன்?’

அவனது அந்தக் கேள்வியால் உற்சாகம் அடைந்த துறவி, ‘நீ இப்போது விஷயத்திற்கு வந்து விட்டாய். உன்னுடைய ஐம்புலன்களின் சகோதரனே, கர்ணன். இந்தக் கலியுகத்தில் அவனது பெயர் ஆசை, மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன். ஆனால் அவன் எப்போதுமே தீமைகளின் பக்கம் தான் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கும் கூட தெரியும். ஆனால் உனக்குள் எழும் ஆசைக்காக, விருப்பத்திற்காக அந்த தவறைச் சரியாக்கும் விதமாக சாக்குபோக்கு சொல்வான். நீயே யோசித்துச் சொல்.. நம் மனம் எப்போதும் ஆசைக்குத்தானே அடிமையாக நினைக்கிறது?’

ஆம்..’ என்பது போல் தலையசைத்தான் இளைஞன்.

அவனது சிந்தனைகள் இப்போது விரிவு பெறத் தொடங்கியது. ‘எவ்வளவு பெரிய காவியத்தை, எவ்வளவு சிறிய தத்துவத்தில் சொல்லிவிட்டார் இந்த துறவி’ என்று நினைத்தபடியே, தன் எதிரில் நின்ற துறவியை முகம் நிமிர்த்திப் பார்த்தான்.

அங்கே அந்த துறவியைக் காணவில்லை. அவர் சொன்ன தத்துவம் மட்டும் அவன் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com