அதுபோல உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும். முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன். அதனால் முருகனைக் ‘குறிஞ்சிக் கிழவன்’ ‘மலைகிழவோன்’ என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும். ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள். ஒரு குழந்தை வடிவம் படைத்து அதை கடவுளாக வழிபாடு செய்தது முருகன் வழிபாடு என சொல்கிறார்கள்.
முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான். தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும், தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும், தனி நிலை எனப்படும் ஆயுதமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு, தமிழ்த் தெய்வமாகிய முருகன் தமிழ் வடிவாக விளங்குகின்றான்.
ஞானமே உடலாகவும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும், இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன். அவனுடைய ஆறு திருமுகங்களில் உலகுக்கு ஒளியையும் ஆன்மாக்களுக்கு அழியாத பேரின்ப ஒளியையும் தருவது ஒரு முகம்.
ஆன்மாக்களுக்கு எல்லாம் அவற்றின் வினைகளைப் போக்கி வேண்டும் வரங்களை அளிப்பது ஒரு முகம். வேள்விகள் வேத ஆகமச் சடங்குகள் இவற்றை ஐயமின்றி முற்றுப்பெறச் செய்வது ஒரு முகம். முனிவர்களுக்கு நூற்பொருளை விளக்குவது ஒரு முகம். நேசமுடன் போகம் நுகரும் வள்ளி தெய்வானை அம்மையர்க்கு மோகம் தருவது ஒரு முகம்.
அசுரரை அழித்துக் களவேள்வி செய்கிறது ஒரு முகம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் «பரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன். முருகன் ஒரு தொகுப்புத் தெய்வம். முருகனை வணங்கினால் பல கடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம். மகனுக்குச் செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவபிரானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால் சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால் தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவர். எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது.
முருகனை அன்புடன் வழிபட்டு முருகா முருகா என கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களை ஒருபோதும் எத்தகைய துன்பமும் அணுகாது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
கந்தவேல் முருகனுக்கு அரோகரா..
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.