வினைகள் தீர்த்தருள்வார் விநாயக கோரக்கர்

திருப்புவனம் கோட்டை

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவம், ஒவ்வொரு பக்தராலும் அவரவர் மனப் பக்குவத்துக்கு ஏற்றபடி உணரப்படுகிறது. எப்படி சிவன் எங்கும் வியாபித்திருக்கிறாரோ, அதேபோல அவனருளை நேரடியாகப் பெற்ற அடியார்களும் தம் மனோபலத்தால் ஒரே சமயத்தில் பல இடங்களிலும் இருக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். சித்தர்கள் என்ற பிரிவின்கீழ் அவர்கள் வந்தாலும், இவர்களும் சிவ அம்சமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோரக்கர். சாம்பலில் பூத்த மலர் இவர். பூமியில் இவரது அவதாரம் பச்சிளம் குழந்தையாக ஏற்படவில்லை; பன்னிரண்டு வயது பாலகனாகவே தோன்றினார் கோரக்கர். வெவ்வேறு தலங்களில் சிவ அம்சம் லிங்க ரூபமாக பல பெயர்களில் அருட்பாலித்துக் கொண்டிருப்பது போலவே, இந்த சித்தரும் கோயில்கொண்டு அறநெறி பரப்புகிறார்.

உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் என்ற தலத்தில் அவதரித்த கோரக்கர், உலகெங்கும் பயணம் செய்து நிறைவாக தமிழகம் வந்து நாகப்பட்டினத்துக்கு அருகே வடக்குப் பொய்கை நல்லூரில் ஜீவ சமாதி கொண்டிருக்கிறார் என்கிறார்கள். கோயமுத்தூர் அருகில் உள்ள பேரூரில் சித்தியடைந்தார் என்றும் சொல்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகே உள்ள அத்ரி மலையில் கோரக்கருக்காக அத்ரி மாமுனி வரவழைத்த கங்கை, கடனாநதி என்ற பெயரில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அந்த நீரால் அபிஷேகம் செய்து, பூஜைகளையும் மேற்கொண்டார் கோரக்கர். அந்த லிங்கம் கோரக்கநாதர் என்று வழங்கப்படுகிறது. இப்படி, தான் சென்ற இடங்கள் பலவற்றில் தம் அம்சத்தை நிலைத்திருக்கச் செய்த அந்த சித்தர், அந்த வகையில் மதுரை அருகிலும் விநாயக கோரக்கராக விளங்குகிறார்.

ஒரு கடற்கரைப் பகுதியில் சிவபெருமான், உமைக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தபோது அதை ஒரு மீன்குஞ்சு கேட்க நேர்ந்தது. உடனே அந்த உபதேசப் பயனாக அதற்கு மனித உருவம் கிடைத்தது. இவர் மச்சேந்திரர் என்று அழைக்கப்பட்டார். சிவஞானம் கொண்ட அவர் ஒவ்வொரு ஊராகப் பயணம் மேற்கொண்டார். அப்படி அவர் கோரக்பூர் வந்தபோது ஒரு வீட்டின்முன் வந்து நின்று யாசகம் கேட்டார். தனக்கு பிட்சை அளித்த பெண்மணி, குழந்தைப் பேறின்றி வருந்துவது அவருக்குத் தெரிந்தது. உடனே அவர் சிறிதளவு விபூதியை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, அதனை உட்கொண்டு மகப்பேறு அடையுமாறு ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். ஆனால் அந்தப் பெண்ணோ, பிறர் பேச்சைக் கேட்டு பயந்து அந்த விபூதியை அடுப்பில் வீசிவிட்டாள்.

12 வருடங்கள் கழித்து மச்சேந்திரர் மீண்டும் அப்பகுதிக்கு வந்தார். தான் விபூதி கொடுத்த பெண்ணிடம் ‘எங்கே உன் மகன்?’ என்று கேட்டார். அந்தப் பெண்ணோ, அதைத் தான் அடுப்பில் வீசிவிட்டதைச் சொன்னாள். உடனே அந்த அடுப்பருகே சென்ற மச்சேந்திரர், ‘கோரக்கா,’ என்று கூப்பிட, பளிச்சென்று 12 வயது பாலகன் ஒருவன் எழுந்தான்; அவர் அடி பணிந்தான். சுற்றி நின்றவர்கள் வியப்பால் விழி விரிய பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவன் அப்போதே மச்சேந்திரருக்கு சீடனாகி, அவர் பின்னாலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டான். ஒரு சந்தர்ப்பத்தில், தான் தன் சீடரிடம் கொடுத்து வைத்திருந்த தங்கக் கட்டி காணாமல் போய், அதற்கு பதிலாக செங்கல் இருந்தது கண்டு மச்சேந்திரர் வெகுண்டார். கோரக்கர் மீது பழி சுமத்தினார். அதைக் கேட்டு திடுக்கிட்ட கோரக்கர் தன் குருநாதருக்கே பாடம் கற்பிக்கும் வகையில், உயர்ந்த ஓர் மலைமீது ஏறி, அங்கே சிறுநீர் கழிக்க, அந்த நொடியே அந்த மலை முற்றிலும் தங்க மலையாகிவிட்டது.

‘உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தங்கம் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று குருவைப் பார்த்துச் சொன்ன கோரக்கர் இனி தன் வழி தனி வழியாக மாறிவிட, குருநாதரைப் பிரிந்து சென்றார். உலகையே தன் சக்தியால் சுற்றிவந்தவர் கோரக்கர். சீன தேசத்தில் ஐந்தாண்டுகள் வாழ்ந்திருந்ததாகத் தம் குறிப்பில் தெரிவித்திருக்கிறார். அதாவது எங்கெங்கெல்லாம் அவர் சென்றாரோ அங்கெங்கெல்லாம் தன் அம்சத்தை விட்டுவிட்டு, தாம் அங்கேயே தொடர்ந்து வாழ்வதாகிய சித்து விளையாடலை நிகழ்த்தியவர். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். தன் பிறப்பிடமான மராத்திய மாநிலத்திலிருந்து யாத்திரையை மேற்கொண்ட இவருடன் பட்டாணி ராவுத்தர் என்பவரும் வந்திருக்கிறார். பயணத்தின்போது கோரக்கர் பாடிய பல பாடல்களை ராவுத்தரும் பிற சீடர்களும் படியெடுத்திருக்கிறார்கள்.

மதுரையை அடுத்துள்ள திருப்புவனத்தில் கோரக்கர், மூலக் கடவுளான விநாயகர் ரூபத்திலேயே காட்சி தருகிறார். சித்தர்களிலேயே மூத்தவர் இப்படி தோற்றம் தருவது சரிதானே! இவ்வாறு கோயில் கொண்டிருக்கும் கோரக்கர் கிழக்கு நோக்கி இருக்கிறார். சப்த கன்னியர் சந்நதியும் அதே திசை பார்த்து இருக்கிறது. கோரக்கருடன் உடன் வந்த பட்டாணி (ராவுத்தர்) சுவாமி, புளியமர மேடை மீது அமர்ந்திருக்கிறார். வலது, இடது பக்கங்களில் மண்டபங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மடப்பள்ளி, முடி இறக்கும் பிரார்த்தனை நிறைவேற்ற, நீராட என்று தனித்தனியே மண்டபங்கள் உண்டு. கோரக்கருக்கு தினமும் காலை 8 மணிக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.

சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மாலையில் சுண்டக்கடலை பிரசாதம். சங்கடஹர சதுர்த்தி மற்றும் பிற விநாயகருக்கான எல்லா விசேஷங்களும் இங்கே விநாயக கோரக்கருக்கு சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பௌர்ணமி தினமும் இங்கே திருவிழா கொண்டாட்டம்தான். எலும்பு உபாதை உள்ளவர்கள், படிப்பில் நாட்டம் இல்லாதவர்கள், பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள், தம் ஜாதகத்தில் சனிதோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து விநாயக கோரக்கரை வணங்கி தம் குறைகள் நீங்கப் பெறுகிறார்கள். மதுரை  மானாமதுரை வழித்தடத்தில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திருப்புவனம். திருப்புவனம் கோட்டை என்ற இடத்தில் அருட்பாலிக்கிறார் விநாயகர் கோரக்கர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com