விரும்பிய வரங்களை அளிக்கும் விரதங்கள்

ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில், விரதங்களும் ஒன்று. அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக இது பார்க்கப்படுகிறது. ‘விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது’ என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது, அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது, தண்ணீர், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது என பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது உறுதி என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. விரதத்துக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே, காரம் குறைவான, பருப்பு சாதம் மாதிரி நன்கு வேகவைக்கப்பட்ட உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் உண்பது ஆன்மிக வாழ்வுக்கு ஏற்றது.

குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள், தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.

தமிழ் மாத விரத வகைகள்

அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட முக்கியமானது என்பதுபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஓர் விரத தினமாக அமைந்திருக்கிறது. அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

சித்திரை மாதம் பவுர்ணமியன்று. சித்ரா பவுர்ணமி என்று சொல்லப்படும். அன்று விரதம் இருந்து சித்ரகுப்த பூஜை செய்யப்படும்.

வைகாசி மாதம் பவுர்ணமி வைகாசி விசாகம் ஆகும். அன்று நீராடி வைசாக தானம் என்று தயிர் சாதம், பானகம், நீர் மோர் ஆகியவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.

ஆனி மாதம் வளர்பிறையில் கோபத்ம விரதம் என்று மகா விஷ்ணுவுக்கு உகந்த விரதம் வருகிறது. அந்த விரதத்தை பெண்கள் விசேஷமாக கடைப்பிடிக்கிறார்கள்.

ஆடி மாதம் பவுர்ணமி அன்று வட சாவித்ரி விரதம் மற்ற மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடி மாத பவுர்ணமியில் கோகிலா விரதம் என்பதும் வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆவணி மாதம் பவுர்ணமி அன்று ரட்ஷா பந்தனம் ஆகும். ரிக், யஜூர் வேதங்களுக்கு உபாகர்மம் எனப்படும் ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படும்.

புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் தேய்பிறை முழுவதும் மகாளய பட்சம் என்று முன்னோர்களை வழிபட வேண்டும். அதற்கு மறுநாளில் இருந்து சாரதா நவராத்திரி ஆகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை கொலு பொம்மைகளில் ஆவாஹனம் செய்து, ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். பத்தாவது நாள் விஜயதசமி ஆகும். மேலும் புரட்டாசி பவுர்ணமி அன்று உமாமகேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களுக்கு விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று சிவ ரகசியம் குறிப்பிடுகிறது.

ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினம் ‘கௌமுதீ ஜாகரண விரதம்’ என்று வட நாட்டில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். அன்று இரவில் நிலவு ஒளியில் லட்சுமி பூஜை செய்யப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று ‘நரக சதுர்த்தசி’ எனப்படும் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று எல்லா வீடுகளிலும், சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசையாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றைய நாளில் தீப தானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும். மகாபலிக்கு மகா விஷ்ணு வரம் அளித்த தினம். அன்று பக்தேஸ்வர விரதம் என்று வட மாநில பெண்கள் பரமேஸ்வர பூஜை செய்வார்கள்.

மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால் அதிகாலையிலேயே எல்லா கோவில்களிலும் அபிஷேகம், பூஜை நடைபெறும். கடவுளுக்கு பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். மார்கழி மாதம் பவுர்ணமி அன்று திருவாதிரை உற்சவம். எல்லா சிவன் கோவில்களிலும் நடராஜன் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவகாமி அம்மையுடன் நடராஜப்பெருமானுக்கு சிதம்பரத்தில் விசேஷ அபிஷேகமும், புறப்பாடும் சிறப்பாக இருக்கும்.

தைமாதம் பவுர்ணமி அன்று தைப்பூச விழாவானது, திருவிடை மருதூர் தலத்திலும், வடலூர், பழனி முதலிய ஸ்தலங்களிலும் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் சுக்ல பஞ்சமி ‘வசந்த பஞ்சமி’ எனப்படும். வசந்த ருது ஆரம்பிக்கப் போவதாக பார்வதி பரமேஸ்வர வழிபாடு செய்வார்கள்.

மாசி மாதம் பவுர்ணமி தினமானது மாசி மகம் ஆகும். அதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே உற்சவம் ஆரம்பித்து, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறும். பவுர்ணமி அன்று தீர்த்த வாரி. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்களை செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமி அன்று பன்னிரண்டு வருஷத்துக்கொரு மகாமகம் கும்பகோணத்திலும், பிரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் நடக்கும். அந்த இடங்களில் நீராடிய பின்னர் தானம் செய்வது விசேஷமானது.

பங்குனி மாதம் பவுர்ணமி அன்று ‘ஹோலிகா’ என்னும் ஹோலி பண்டிகை வடநாட்டில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.

விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

இவ்விதம் பல விரதங்களையும், ஸ்நானம், தானம், பூஜை ஆகியவற்றை முறைப்படி செய்து, இவ்வுலகில் நல்வாழ்வு வாழலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com