எவ்வளவு பெரிய பணக்காரனானாலும் சரி பரம ஏழை ஆனாலும் சரி அனைவரது எண்ணமும் தனது வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்பதே. செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமியை எவர் ஒருவர் வழிபடுகிறார்களோ அவர்களது வீட்டில் நிச்சயம் செல்வம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் லட்சுமியை வழிபடுகையில் கூறவேண்டிய லக்ஷ்மி மூல மந்திரம் இதோ.
மகாலட்சுமி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏய்யேஹி
ஏய்யேஹி சர்வ
ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா –
– மகாலட்சுமி தேவிக்குரிய சக்தி வாய்ந்த மூல மந்திரம் இது. இந்த மூல மந்திரத்தை ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி படத்தை தூய்மை செய்து, அப்படத்திற்கு பொட்டிட்டு, பூக்கள் சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, சர்க்கரை கலந்த பசும்பால் நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். பிறகு இந்த மூல மந்திரத்தை 108 முறை 1008 முறை துதித்து வழிபட வேண்டும். தினமும் காலையில் குறைந்த பட்சம் 16 முறை இந்த லட்சுமி மூல மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். மந்திரஜபம் காலத்தில் கோபப்படுதல், சத்தமாகப் பேசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேற்கூறிய மந்திரத்தை பாராயணம் செய்து வருபவர்களுக்கு மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்க பெற்று செல்வ சேர்க்கை அதிகரிக்கும். தினசரி மற்றும் மாத வருமானம் பெருகும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் அதிகரிக்கத் தொடங்கும். வாழ்க்கையில் ஆடம்பர வசதிகளின் பெருக்கம் உண்டாகும். லட்சுமி வழிபாடு முற்காலங்களில் பணத்தை லட்சுமி என்றே அழைக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. பணம் என்பது ஒரு ஜீவ நதியைப் போன்றது. அது ஓரிடத்திலேயே தங்காமல் தொடர்ந்து வேறு இடங்களுக்கு சென்று கொண்டே இருக்கும். அதே போன்று தான் அந்த பணத்திற்கு அதிபதியாக இருக்கும் லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் ஒரே நபரிடத்தில் இல்லாமல், வேறு வேறு நபர்களுக்கு சென்றவாறே இருக்கும். அந்த லட்சுமி கடாட்சம் நமக்கு தொடர்ந்து கிடைத்திட நாம் லட்சுமி தேவியின் மனம் குளிரும் படி நடந்து கொள்வதும், லட்சுமி தேவியை முறையாக பூஜித்து வழிபாடுகள் செய்வதும் பலன் தரும். வாழ்நாள் முழுவதும் நமக்கு பணத்தின் தேவை இருக்கிறது. எனவே வாழ்நாள் முழுவதும் அந்தப் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. லட்சுமி வழிபாட்டிற்குரிய தினங்கள் செல்வ மகளான ஸ்ரீ லட்சுமி தேவியை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும், வாரந்தோறும் வருகிற வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடி மாதத்தில் வருகின்ற வரலட்சுமி விரதம், இவை எல்லாவற்றையும் விட ஐப்பசி மாதத்தில் வருகின்ற தீபாவளித் திருநாள் ஆகியவை லட்சுமி தேவி பூஜை மற்றும் விரதங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த தினங்களாக இருக்கின்றன. இந்த தினங்களில் லட்சுமி தேவிக்கு படையல் வைத்து, தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, லட்சுமி காயத்ரி மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால், உங்களுக்கு லட்சுமி தேவியின் பூரண அருள் கடாட்சம் கிடைக்க வழி வகை செய்கிறது. லட்சுமி மந்திர பலன்கள் லட்சுமி தேவியை முறையாக பூஜித்து, விரதமிருந்து வழிபாடு செய்யும் நபர்களுக்கு செல்வ மகளான லட்சுமியின் முழுமையான அருட்பார்வை கிடைக்கிறது. இதனால் வாழ்வில் வளமை பெருகுகிறது. செல்வ சேர்க்கை அதிகரிக்கிறது. வறுமை நிலை நீங்கும். புதிய வீடு, வாகனம் என வாழ்வில் வசதி வாய்ப்புகள் ஏற்படும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் மனதிற்கினிய இல்லற வாழ்வு அமையும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தீர வழி உண்டாகும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும்.விரும்பிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மனக்கவலைகள், குறைபாடுகள் இல்லாத வாழ்க்கை அமையப் பெறுவார்கள்.