ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் இன்று தொடக்கம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழை திருநாள் 9 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

முதல் நாளான இன்று காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 9.45 மணிக்கு யாகசாலைக்கு வந்து சேருகிறார். அங்கு காலை 10.30 மணிக்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் நம்பெருமாள் அலங்காரம் வகையறா கண்டருளி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

யாகசாலையில் நம்பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதனால் இந்நிகழ்ச்சி பூப்பரத்திய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூழிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். எனவே இதற்கு நூலிலைத் திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவ்விழாவே ஸ்ரீரங்கத்தில் திருப்பவித்ர உற்சவம் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.

பவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்க, உபாங்க சேவை நாளை(செவ்வாய்க்கிழமை) மதியம் நடக்கிறது. மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பூச்சாண்டி சேவையை பக்தர்கள் தரிசிக்கலாம்.

பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேனி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பார்கள். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும். எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

பவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 15-ந்் தேதி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளுகிறார். உற்சவத்தின் 9-ம் நாளான 17-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது. பவித்ர உற்சவ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com