உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்

கமலவல்லி நாச்சியார் சன்னதி நுழைவு வாயில் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

108 வைணவ தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலின் உபகோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் பெயரளவில் நாச்சியார் கோவில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் கமலவல்லி நாச்சியார் தாயாராக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரெங்க மன்னரின் மகள் ஆண்டாளாக அவதரித்து பெருமாளையே மணந்து கொண்ட மகாலட்சுமியை போன்று தான் கமலவல்லியும் இம்மண்ணுலகில் ஒரு மன்னனின் மகளாக அவதரித்து ரெங்கநாதர் மீது காதல் கொண்டு அவரை அடைந்து உள்ளார். இதன் அடிப்படையில் நாச்சியார் கோவில் உருவானது எப்படி? என்பதற்கு ஒரு தனி வரலாறே உள்ளது.

முற்கால சோழ மன்னர்களில் ஒருவனான நந்த சோழன் உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தான். குழந்தை பேறு இல்லாத அந்த மன்னன் வேட்டைக்கு சென்ற இடத்தில் ஒரு குளத்தில் மலர்ந்திருந்த தாமரையில் பெண் குழந்தை கிடந்தது. இதனை கண்ட மன்னன் குழந்தையை எடுத்து கமலவல்லி என பெயர் சூட்டி வளர்த்தான். பருவ வயதை அடைந்த கமலவல்லி தன் தோழிகளுடன் சென்றபோது குதிரையில் மாப்பிள்ளை கோலத்தில் வலம்வந்த ரெங்கநாதரை கண்டதால் அன்று முதல் அவர் மீது காதல் கொண்டாள்.

ரெங்கநாதரையே நினைத்து அவள் உருகினாள். தனது மகளின் நிலையை அறிந்து வேதனையில் மன்னன் தவித்த போது அவனது கனவில் தோன்றிய ரெங்கநாதர், “மகாலட்சுமியையே உனது மகளாக நாம் படைத்தோம். அவளை எனது சன்னதிக்கு திருமண கோலத்தில் அனுப்பிவை” என ஆணையிட மன்னனும் மகிழ்ச்சியுடன் கமலவல்லியை அவ்வாறே ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று ஒப்படைத்தான். அப்போது கமலவல்லியை ரெங்கநாதர் ஆட்கொண்டார் என்பது வரலாறு. இந்த நிகழ்வின் நினைவாக உறையூரில் அந்த மன்னர் கட்டிய கோவிலே நாச்சியார் கோவிலாகும்.

கோவில் மூலஸ்தானத்தில் அழகிய மணவாள பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக்கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரமன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கின.

கோவிலின் முன் பகுதியில் உள்ள கோபுரம் மற்றும் கோவில் சன்னதிகளில் உள்ள விமானங்களுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து முடிந்துள்ளது. இதனால் கோவில் கோபுரம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் கோவிலின் உள்பிரகாரங்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com