ஏகாதசி தினங்களின் ஏற்றமிகு சிறப்புகள்!

ஏகாதசி தினங்களின் ஏற்றமிகு சிறப்புகள்!

2018-10-19@ 16:10:49
ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருப்பதுதான் ஏகாதசி. அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், அந்தந்த ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.

* சித்திரை மாத வளர்பிறையில் ஏகாதசி, ‘காமதா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘பாப மோகினி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும்.

* வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘மோகினி ஏகாதசி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘வருதித் ஏகாதசி’ என்றும் கூறப்படுகின்றன. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்த பலனைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

* ஆனி மாத வளர்பிறை ஏகாதசி ‘நிர்ஜலா ஏகாதசி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘அபரா ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் விரதம் மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி ‘சயனி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘யோகினி’ என்றும் பெயர்பெற்றுள்ளன. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

* ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி – ‘புத்ரஜா’; தேய்பிறை ஏகாதசி – ‘காமிகா’. இந்த தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘பத்மநாபா’; மற்றும் தேய்பிறை ஏகாதசி ‘அஜா’ ஆகும். இந்நாட்களில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா’; தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா’. இந்த ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, ‘பிரபோதின’ எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலன் உண்டு. தேய்பிறை ஏகாதசியான, ‘ரமா’ தினத்தில் இறைவனுக்கு பழங்களை நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.

* மார்கழி மாத ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி‘ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இது மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘உத்பத்தி’ ஏகாதசி எனப்படுகிறது. பரமபதம் கிடைக்கச் செய்யும் அற்புத நாட்கள் இவை.

* தை மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘சுபலா’ என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.
* மாசி மாத வளர்பிறை ஏகாதசி ‘ஜெயா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘ஷட்திலா’ என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்கள் முக்தியடைய வழி செய்வார்கள்.

* பங்குனி தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’ எனப்படும். இந்த நாளில் ஏழு வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். வளர்பிறை ஏகாதசி ‘ஆமலகி’ எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும்.

* ஒரு ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி ‘கமலா ஏகாதசி’ எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com