பாவங்களைப் பொசுங்கச் செய்யும் பரமன்

வன்னிக்குடி முழையூர்

பாவம் செய்வதில் மானிடர் போலவே, தேவர்களுக்கும் பங்கு உண்டு. அந்தவகையில், அக்னி தேவன் மேற்கொண்ட பல செயல்வினைகளால் பாவ வினைகள் அவனைச் சூழ்ந்துகொண்டன. அப்படி அக்னி தேவன் செய்த பாவம்தான் என்ன? சிவனடியாரான சிபிச்சக்கரவர்த்தியின் மன உறுதியை சோதிக்க கருதி, அக்னி தேவன் புறாவாகவும், இந்திரன் பருந்தாகவும் வடிவம் பெற்று, சிபிச்சக்கரவர்த்தியை துன்புறுத்தி சோதித்த அந்தப் பாவம் புறா வடிவம் பெற்ற அக்னி பகவானைப் பற்றியது. தாருகா வன முனிவர்கள் சிவனுக்கு எதிராக மேற்கொண்ட அபிசார வேள்வியில் அனலாசுரனாக அக்னி தேவன் பங்கேற்றதாலும் பாவவினை அவனை ஆட்கொண்டது.

வாயு பகவானுடன் ஆணவத்துடன் மேற்கொண்ட தர்க்கத்தினால், வாயு பகவானால் அனையப் பெறும் சாபம் பெற்றான் அக்னி. சிவபெருமானைப் புறக்கணித்து தட்சன் செய்த தட்ச யாகத்தில் அக்னி தேவன் பங்கேற்ற பாவவினையும் அவனைச் சூழ்ந்தது. இப்படி பலவகையிலும் பாவங்களால் பீடிக்கப் பெற்ற அக்னி தேவன் அவற்றிலிருந்து விமோசனம் பெற பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று வழிபாட்டை மேற்கொண்டான். அக்னி இப்படி சிவபெருமானை பூஜித்த திருத்தலங்கள் அக்னீஸ்வரம் என அழைக்கப்படுகின்றன. அத்தகையத் தலங்கள் மொத்தம் ஏழு – திருப்புகலூர், கஞ்சனூர், வன்னியூர்,  கொள்ளிக்காடு, கோட்டூர், காட்டுப்பள்ளி  மற்றும் வன்னிக்குடி முழையூர்.

இத்தலத்தின் தென்கிழக்கு மூலையில் அக்னி தீர்த்தம் உண்டாக்கி, இத்தலத்திலேயே குடில் அமைத்து அக்னி தேவன் தங்கியிருந்து, தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் பூஜித்து பாவம் நீங்கி அருள் பெற்றதாக தல வரலாறு சொல்கின்றது. வன்னிக்குடி முழையூர் என்ற இத்தலத்தில் கைலாசநாதர் அருள் பெருக்குகிறார். இறைவியின் பெயர், சௌந்திர நாயகி. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ராஜ கோபுரம் இல்லை. உள்ளே நுழைந்ததும் முன்மண்டபம் விசாலமாக உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் இறைவியின் சந்நதி வலதுபுறம் அமைந்திருக்கிறது.

அன்னை தென்திசை நோக்கி, நின்ற கோலத்தில்,  நான்கு கரங்களுடன் புன்னகை தவழ அருட் பாலிக்கும் அழகு மனம் நெகிழச் செய்கிறது. எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் கைலாச நாதர், லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருட் பாலிக்கிறார். சதுர வடிவிலான ஆவுடையாருடன் இறைவனின் திருமேனி அருட் பாலிப்பது இங்கு சிறப்பு அம்சமாகும். அக்னியின் மூவகை வடிவங்களில் ஒன்றான நாற்கோண வடிவிலான ‘ஆகவநீய’ அமைப்பை சார்ந்து இறைவியின் இந்த சந்நதி அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் சிவன் சந்நதியின் வலதுபுறம் துவாரக வினாயகரும், சிவன் கர்ப்பகிரக தென்புற கோஷ்டத்தில் வினாயகரும், தென்மேற்கு நிருருதி மூலையில் தல விநாயகரும் அருட் பாலிக்கின்றனர். இறைவனின் தென்புற தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி அருட் பாலிக்கிறார். மேற்கு பிராகாரத்தில் நான்கு திருக்கரங்களுடன் வஜ்ரவேல் தாங்கி வள்ளி-தெய்வானையுடன் நின்ற கோலத்தில் முருகன் திருக்காட்சி நல்குகிறார். பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் கஜலட்சுமி சந்நதியும், வடக்குப் பிராகாரத்தில் தென்திசை நோக்கி சண்டீசர்சந்நதியும் உள்ளன. ஆலயத் தலவிருட்சம், பன்னீர்மரம்.

இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளைக் கடந்தது என அனுமானிக்கப்படுகிறது. அக்னி பகவானுக்குரிய கார்த்திகை நட்சத்திரமே முருக பெருமானின் ஜென்மநட்சத்திரம். எனவே, மாத கார்த்திகை நாட்களில் விரதமிருந்து இங்குள்ள முருகப் பெருமானை வழிபட்டு வந்தால் புத்திரபாக்யம் கிடைப்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள். பதினெண் புராணங்களுள் பத்தாவது புராணமான அக்னி புராணம், அக்னி பகவானால் வசிஷ்ட முனிவருக்கு அருளிச் செய்யப் பெற்றதாகும். இப்புராணம் 383 அத்தியாயங்களையும், 15000 ஸ்லோகங்களையும் கொண்டது.

இப்புராணத்தில்; அஷ்டதிக்கு பாலகர்களான இந்திரன், அக்னி, யமன், நிருருதி, வாயு, வருணன், குபேரன், ஈசானன் ஆகியோரில் இரண்டாம் பாலகராகச் சொல்லப்படும் அக்னி தென்கிழக்கு திசையின் காவலராக குறிப்பிடப்படுகிறார். அக்னி தேவன் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் தோன்றியதாகவும், அதனால் இன்றளவும் அந்நாளில் தீப வடிவில் அக்னி பகவான் வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அக்னி தேவன் இரண்டு முகங்களையும், மூன்று கால்களையும், ஏழு கைகளையும் உடைய வடிவினன்.

இதே தோற்றத்தில் அக்னி பகவானை மதுரை, கஞ்சனூர், திருப்புகலூர் ஆகிய தலங்களில் இன்றும் தரிசிக்கலாம். அக்னி பகவான் தன்னை பூஜித்ததால் அவனது பாவங்களைப் போக்கி, அருள் புரிந்த இத்தலத்து இறைவனை வணங்கினால் நாம் செய்த பாவங்களும் தீயிலிட்ட சருகாகப் பொசுங்கிப் போகும் என உறுதியாக நம்புகின்றனர்பக்தர்கள். திருப்பனந்தாள் – பந்தநல்லூர்பேருந்து தடத்தில் பந்தநல்லூருக்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது வன்னிக்குடி முழையூர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com