இந்திரன் வணங்கிய திருத்தலங்களின் சிறப்புகள்

திருவாரூர் தியாகராஜர், இந்திரனால் வழிபடப்பட்டவர். முசுகுந்த சக்ரவர்த்தியின் தவத்தின் பயனாக அவர் பூலோகம் எழுந்தருளியது வரலாறு. மனிதர்களுக்கு மறுபிறவியைத் தவிர மற்ற வரங்களை வாரி வழங்கும் கருணாமூர்த்தி இவர்.

* காணாமல் போன தன் ஐராவதம் யானையை கும்பகோணம், தாராசுரத்தில் சிவனருளால் கண்டுபிடித்த இந்திரன், இந்திர விமானம் அமைத்து ஐராவதேஸ்வரரை பூஜித்து பேறு பெற்றிருக்கிறான். காணாமல் போன பொருட்களை இவரிடம் வேண்டிக்கொண்டால் அவை மீண்டும் கிடைக்கின்றனவாம். இத்தல இறைவியின் துவாரபாலகிகளாக கங்கையும் யமுனையும் உள்ளது சிறப்புத் தகவல்.

* காஞ்சிபுரத்தில் உள்ள கச்சிநெறிக் காரைக்காட்டில் இந்திரன் தீர்த்தம் நிறுவி, இத்தல ஈசனான சத்தியவிரதநாதரை வழிபட்டு வளங்கள் பெற்றான். இத்தல ஈசனை புதன் கிழமைகளில் வணங்க புத தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.

* ஓமாம்புலியூருக்கு அருகே உள்ள திருக்கடம்பூர் எனும் கரக்கோயிலில் அருளும் அமிர்தகடேஸ்வரரை இந்திரன் வழிபட்டிருக்கிறான். இத்தல ஈசன், பக்தர்களுக்கு அமிர்தம் போன்ற இனிமையான வாழ்வை அருள்பவர்.

* பூம்புகாரில் உள்ள திருச்சாய்க்காடு எனும் சாயாவனத்தில் உள்ள ஈசனை பூஜித்து இந்திரன் பல வரங்கள் பெற்றான். நிழல் போல் நம்மை தொடரும் துன்பங்கள் இத்தல ஈசனை வணங்கிட விலகுகின்றன.

* திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்கைச் சின்னம் என்ற திருக்கச்சனத்திலுள்ள கைச்சின்ன நாதரை வழிபட்டு இந்திரன் தன் சாபம் நீங்கினான். இங்கே ஈசனோடு திருமாலும் திருவருள் புரிகிறார். குற்றம் புரிந்தோர் மனமுருகி வழிபட்டால் இத்தல ஈசன் அவர்களை மன்னித்து அருள்கிறான்.

* கும்பகோணம், வைத்தீஸ்வரன் கோயிலுக்கருகே உள்ள குறுமாணக்குடி கண்ணாயிரநாதரை வழிபட்டு கௌதம முனிவர் இட்ட சாபத்தை, இங்கே தீர்த்தம் நிறுவி அதில் நீராடி, இந்திரன் நீங்கப்பெற்றான். கண்நோய்களைத் தீர்ப்பதிலும் குழந்தை வரம் தருவதிலும் இத்தல ஈசன் நிகரற்றவர்.

* மேகங்களுக்கு அதிபதியான இந்திரனுடன் புஷ்பகம், ஆவணி, புஷ்பக தரணி, சலநிதி, சலாநிதி, நீலம், சலவாரிணி ஆகிய மேகங்களும் வழிபட்டு பேறுபெற்ற ஈசன், திருமீயச்சூரில் மேகநாதராக அருள்கிறார். இத்தலம் சூரியதோஷ பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com